சித்தேஷின் சகோதரனா?: 20
அத்யாயம் 20: சித்தேஷின் சகோதரனா?
தன் அறையில் இருந்து தெரிந்த கருநிலவை பார்த்துக் கொண்டே மதி அமைதியாய் நின்றிருந்தாள்.
அவள் அறிந்து கவனித்த வரையில் மாயலோகத்தில் கால நேரம் அனைத்தும் பூமியைவிடுத்து வேறுப்பட்டிருந்தது. அதனால் தான் வந்து எவ்வளவு நாட்கள் ஆனதென்று கூட தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவள் கடந்த சில நாட்களாய் தங்கி வரும் இடம் ஒளிவேந்தர்களின் அரச குடும்பம் வாழும் கோட்டை. இது அஸ்த்திரஞாலத்தில் இருக்கும் மாபெரும் மலையான சன்மலையில் ஒதுக்குப் புறமாக கானகத்தின் இடையே அமைந்துள்ளது.
கடந்த நாட்களில் அவள் சித்தேஷ்வரை பார்த்த முறைகள் கொஞ்சமே கொஞ்சம் தான். மஞ்சள் கதிரோன் உச்சியில் இருக்கும் போழ்தும் கருநிலவு மறையும் போழ்தும் மட்டுமே அவளைப் பார்க்க வருவான்.
மற்ற நேரமெல்லாம் என்ன செய்கிறான், எங்கு செல்கிறான் என எதுவும் மதிக்கு தெரியவில்லை.
அவள் உடையவனைப் பற்றி எண்ணிக் கொண்டே ஜன்னலில் சாய்ந்து வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க, அவள் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது.
" உள்ள வாங்க... "
மதி அனுமதி கொடுத்ததும் முதலாக சித்தேஷ் உள்ளே வர அவன் பின்னே மென்னகையோடு ஒயிலாய் நடந்து வந்தாள் ஒரு பெண்.
சித்தேஷைப் பார்த்ததும் தானாய் மதியின் முகம் மலர்ந்தது.
மதியோ சித்தேஷோ பார்க்கும் முன்பாக குடுகுடுவென ஓடி வந்து மதியின் தோள்களை பிடித்துக் கொண்டு அவளை உலுக்கத் தொடங்கினாள் அந்த அழகி, இளவொளி.
" ஐயகோ இத்தகைய எழில் கொஞ்சும் தெய்வத்தின் எழிலாளை காணத் தான் தடை விதித்தீரோ அத்தான்? தம் உடையாளை கொஞ்சம் எமக்கும் பங்குத் தாரும். ஐயகோ இறைவியன்னையே இத்துனை காலம் இந்த அழகியை எங்கே மறைத்து வைத்திருந்தீரோ? ஒருவழியாக தமக்கு எம் அத்தானை கண்டறியும் காலம் வந்தாகியதா? வாரும் வாரும் தேவியே, "
மூச்சு விட மறந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணவளை கண்களை விரித்து மதி பார்த்துக் கொண்டிருக்க, சித்தேஷ் தான் அவளை காப்பாற்றும் பொருட்டு அமைதியாக குரல் கொடுத்தான்.
" இளா... போதும். "
அவன் ஒற்றைச் சொல்லில் நிலையடைந்த இளவொளி தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டு
" என் அறியாமையை பொருத்தருளும் தேவியே, தம் ஆளை பறிக்கும் அழகில் எம்மையே மறந்துவிட்டேன். நான் இளவொளி, "
மதி விழித்துக் கொண்டே தலையை மட்டும் அசைத்தாள்.
" அந்த ஹர்ஷவர்தேஷ்வரன் தம்மை சொல்லாமல் கொள்ளாமல் தூக்கி வந்திட்டானென்று தாம் அழலுண்டதாக அத்தான் கூறினார். தாம் கவலையுற வேண்டா தேவி, அந்த கயவனை பிடிக்க யான் உதவி கரம் தருகிறேன், " என நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய்தவளை பார்க்க மதிக்கே பிடித்திருந்தது.
" நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க, "
" ஐயகோ எம்மை கண்டு சிரிக்கும் இப்பேரழகு எம்மை நாமத்தோடே அழைக்கலாம் தேவி... அத்தானைப் போல் தாமும் எம்மை இளா என்றழைத்தால் யாம் மேலும் மகிழ்ச்சியுறுவேன். "
" சரி அப்படியே ஆகட்டும் இளா, "
சிரித்துக் கொண்டிருந்த பெண்களை நிறைவாய் பார்த்த சித்தேஷ்
" மதி தமக்கு யான் அருகில் இல்லாத நேரமெல்லம் இளா துணை இருப்பாள். தமக்கு எது வேண்டுமானாலும் அவளை அனுகவும், "
" அப்போ... அப்போ நீங்க எங்கப் போறீங்க? "
அவள் கேள்வியில் மறைந்திருந்த அக்கரையை கண்டு இளவொளி சித்தேஷை பார்த்து கண்களை உருட்டி சிரிக்க, சித்தேஷ் மெலிதாய் புன்னகைத்தான்.
" அவசிய காரியத்திற்காக ராஜ்ஜியம் செல்லும் நிலை... கதிரோன் அயரும் முன் திரும்பிடுவேன், " என கூறிவிட்டு செல்பவனையே மதி பார்த்து நின்றிருந்தாள்.
சித்தேஷ் சென்ற பின்பும் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்த மதியை இளவொளியின் மெல்லிய சிரிப்பொலி உலகுக்கு அழைத்து வந்தது.
" அடடா அத்தானை திகட்டத் திகட்ட இரசித்து அன்பில் திக்குமுக்காடச் செய்யவும் ஓருயிர் வந்திட்டது போலயே... "
" என்ன சொல்றீங்க இளா? "
" ஒன்றுமில்லை தேவி, வர்ணஜாலம் கற்றாலும் உணர்ச்சிகளை தகர்க்க அறிந்திடா என் அத்தான் புன்னகைக்க கற்றுக் கொண்ட மாயத்தை எண்ணி சிரித்தேன். சரி அமரலாம் வாருங்கள் தேவி, "
முளித்துக் கொண்டிருந்த மதியைப் பிடித்து அமர வைத்த இளவொளி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
" தம்மை யான் அறிந்து கொள்ளலாமா தேவி? என் வினா எவைக்கும் அத்தான் பதிலுரைக்கவில்லை. ம்க்கும் ஆறு நாட்களாக தம்மை என் கண்ணில் கூட அவர் காட்டவில்லை, "
" இதுல என்ன இருக்கு? என் பேரு மதி... வான்மதி. நான் பூமில சும்மா தான் சுத்தீட்டு இருந்தேன். எனக்கு ஒரு அக்காவும் மூணு அண்ணனுங்களும் இருக்காங்க, அவங்க கொஞ்சம் தூரமான இடத்துல இருக்காங்க. ஓஹ் எனக்கு வெண்மதியும் தங்கச்சி தான்... "
கடைசியாக அவள் கூறிய பெயரில் இளவொளியின் புன்னகை மறைந்தது.
" வெண்மதி... வெண்மதியை தாம் பார்த்ததுண்டா? "
மதி அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை கவனித்தவாறு இல்லையென தலையசைத்தாள்.
" இது வரைக்கும் பார்த்தது இல்ல, என்ன ஆச்சு இளா? "
" ஒன்றுமில்லை தேவி... இதுவரையில் வெண்மதியின் சித்திரத்தை கூட யான் கண்டதில்லை... "
" ஏன் அப்டி? உங்க அத்தான் அவங்க ஃபோட்டோவையும் மறச்சு வச்சிட்டாரா? "
" அப்படியும் கூறலாம்... எமது தமக்கையும் அவர் சித்திரத்தை கேட்கக் கூட அனுமதித்ததில்லை... வெண்மதியின் கதைகளை கேட்டே வளர்ந்த எமக்கு அவரை காண வேண்டுமென கொள்ளை ஆசை... அதை வார்த்தையால் தீர்த்திட இயலாது. "
" வெண்மதி இல்ல... அப்போ ஆதவன்? "
" ஆதவனா? அவர் யார்? "
இந்த கேள்வியை அவளிடம் எதிர்பார்க்காத மதி இப்போது முளி முளியென முளிக்க இளவொளியும் அவளுக்கு நிகராக அவள் முட்டை கண்களை முளித்துப் பார்த்தாள்.
" கூறும் தேவியே... யாரிந்த ஆதவன்? "
" வெண்மதிய தெரிஞ்ச உனக்கு ஆதவனத் தெரியலையா? " மதி அவளை லேசாக மேலும் கீழும் பார்க்க, ஒருவேளை ஆளைப் பார்க்காமல் சொல்லக் கூடாத விஷயம் எதையும் உளறிவிட்டோமோ என ஒரு பக்கம் மதியின் மூளை யோசித்தது.
" யான் ஆதவன் என்ற நாமத்தோடு எவரையும் சந்தித்ததில்லையே தேவி, தாம் யாரை கூறுகிறீர்? வெண்மதிக்கும் ஆதவனுக்கும்... தாம் ஆதவமதி சரித்திரத்தில் வரும் ஆதவனையா கூறுகிறீர் தேவி? அவர் நாமம் ஆதவனா? மெய்யாகவா? "
இளவொளிக்கு அப்போதே மதி யாரைக் குறிப்பிடுகிறாள் என புரிந்தது. இத்தனை ஆண்டுகள் ஆதவமதியின் சரித்திரத்தின் நாயகன் ஆதவன் என்று அழைக்கப்படுவான் என்ற மெய் மாயலோகத்தில் மறைந்து போன உண்மை... அந்த பழைய நினைவிற்கு அரச குடும்பமோ அல்லது எஞ்சிய மக்களும் கூட மீண்டும் உயிர்ப்புக் கொடுக்க நினைக்கவில்லை.
" அப்டி தான் உங்க அத்தான் சொன்னாரு, "
" என் இருவத்தி ஐந்து வருட வாழ்வில் ஒருமுறை கூட யான் அவர் நாமத்தை கேட்டதில்லை... அவரைப் பற்றி எவரேனும் பேசிக் கூட யான் பார்த்ததில்லை... "
" அப்போ உனக்கு மிரு அதாவது மிருதேஷ்வரனப் பத்தியும் தெரியாதா? "
" ஓஹ்... நன்றாகத் தெரியுமே... குழந்தைகள் கூட இராவில் நித்திரை கொள்ள வேண்டி கூறப்படும் இராட்சச கதைகளில் வரும் அரக்கன் அவன். ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த மாயலோகம் முழுமை பெறா நிலையில் பரிதவிக்கும் காரணகர்த்தன். அவனை அறியா ஓருயிரை இம்மாலோகத்தில் காண்பது அரிதிலும் அரிது தேவி. "
மதி அமைதியாக இளவொளியின் முகத்தில் தாண்டவமாடிய உணர்ச்சிகளை பார்த்படியே அமர்ந்திருந்தாள்.
' இவனுக்கு ஏன் இவ்ளோ பில்டப் குடுக்குறாய்ங்க எல்லாரும்... பாப்புவே பரவாயில்ல போலவே... '
அவள் எண்ணத்தை கலைப்பது போலவே இளவொளி அவளை உலுக்கினாள்.
" சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்... மிருதேஷ்வரன் அப்டி என்ன தான் செஞ்சான்னு நான் தெரிஞ்சிக்கலாமா? "
" ம்ம்ம் தாம் நிச்சயம் ஆதவமதி சரித்திரத்தை அறிந்திருப்பீர் தேவி... மாயலோகத்திலே மாபெரும் உயிரொளி கொண்ட இருவரே ஆதவமதி. அவர்களை வசப்படுத்த எண்ணி அஸ்த்திரஞாலத்தின் மீது அமரராஜ்ஜியம் போர் தொடுத்தனர். அது யாழிதப்போர் என்று எண்வராலும் அழைக்கப்பட்டது. தன் உடையவனை காக்க வெண்மதி அப்போரில் தன் இன்னுயிரை நீத்த ஒரு சில நாழிகையிலே மாயலோகத்தின் இருளைப் போக்கிய சந்திரன் விண்ணுலகைவிட்டு மறைந்தது. "
" என்ன சந்திரன் மறஞ்சிடுச்சா? " மதி ஆச்சர்யமாக கேட்க
" யான் கற்றறிந்த வரையிலும் வெண்மதி சந்திரனின் மறு உயிர். அவர் உயிர் நீத்ததுமே மாயலோகத்தை காத்த இரு கோள்களில் ஒன்றான சந்திரன் தன் சக்தியை இழந்ததாம். அப்போழ்தே தோன்றிய இருளில் தன் அவதாரம் துறந்தான் மிருதேஷ்வரன். அவன் தோற்றத்தையோ அல்லது அவன் பிறப்பயோ யாவரும் அறியார். வெண்மதியின் மரணத்தில் விருட்சி அடைந்த நிழல்வேந்தர் பெருமக்களின் ஒட்டுமொத்த அதீத சக்தியையும் ஓருடலில் பெற்றவனாய் வந்தான் அவன். "
" வெண்மதிக்கும் அவனுக்கும் அப்போ என்ன சம்மந்தம்? "
" யாவரும் அறியார்... ஆனால் வெண்மதியின் மரணமே அவன் இழைத்த பேரிடர் யாவற்றிற்கும் காரணமாகும். கிட்டத்தட்ட பல வருடம் நிலைத்த அவனின் அழிவாட்டம் அமைதியடைந்தப் பிறகும் மாயலோகத்தில் அமைதி நிலைக்க நூறாண்டுகள் ஆனது. "
" இதெல்லாம் நடந்ததுக்கு இடைல தான் ஆதவனையும் அவரு அடச்சிருப்பாரோ... ஹ்ம்... "
" அத்தானா? தாம் கூறுவது மெய்யா தேவி? பேர்பலமும் எப்பெயரும் கொண்ட ஆளவானை என் அத்தான் அடைத்தாரா? "
அவள் கேள்வியில் சற்று சிந்தித்த மதி பின் மெதுவாக சித்தேஷ் கூறிய அனைத்தையும் இளவொளிக்கு எடுத்துக் கூறினாள். அதை கேட்டதும் இன்னும் இளவொளியின் கண்கள் விரிந்தது.
" அத்தானின் சகோதரரா? ஐயகோ இதென்ன உலகறியா வினை?! ஒளிவேந்தர் அரச குலத்தில் எஞ்சிய வாரிசுகள் மூவரே. நேரடி வாரிசான என் அத்தான் சித்தேஷ்வரும், அவரது அன்னை வழி பிள்ளைகளான தமக்கை மயில்விழியும் அந்த ஹர்ஷவர்தேஷ்வரனுமே ஆவர். வெண்மதியும் என் அத்தானின் அன்னை வழி வரும் மாமனின் மகளே ஆவார். அவர்களை விடுத்து என் அத்தானிற்கு வேறெந்த சகோதரரும் அல்லன் தேவி. "
படபடவென சித்தேஷ்வரின் குடும்பத்தையே வரிவரியாய் கூறியவளை கண்டு மதியால் முளிக்க மட்டும் தான் முடிந்தது.
" ஒருவேள... ஒருவேள எதாவது சித்தப்பா பெரியப்பா வழி சகோதரனா கூட இருந்திருக்கலாம்ல இளா...? "
தயக்கத்தோடே இவள் சித்தேஷ் கூறியவை அனைத்தையும் மீண்டும் யோசித்துப் பார்த்தாள். அவன் குரலில் கலக்கமும் இல்லை. அதை பொய்யென கூறும் வகையில் ஒரு பிழையும் தெரியவில்லை. நிச்சயம் ஆதவன் சித்தேஷ் பார்த்து அன்பு வைத்த ஏதோ ஒரு வழி சகோதரனே...
ஆனால் தலையை வேகமாக இடவலதாய் ஆட்டிய இளா தன் சொல்லில் உறுதியாக இருந்தாள்.
" அல்ல தேவி! ஒளிவேந்தர்களின் முந்தைய அரசரும், அத்தானின் தந்தையரும் ஆன ராகவேந்திர அரசாளன் ஒளிவேந்தர் அரச குலத்தின் ஒரே வாரிசாவார். அவருக்கும் என் அத்தான் ஒரே வாரிசு தான். நிச்சயம் அவருக்கு வேறு சகோதரர் அல்லர் தேவி. "
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro