3
அன்று மாலை வீட்டுக்கு வந்து கைபேசியுடன் கட்டிலில் சரணடைந்துவிட்டபோது, சஞ்சனா வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் தனது பையை முன்னறையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.
கோதுமையை மாவரைக்கச் சென்றிருந்த கீதா திரும்பி வந்து அவளைப் பார்த்துவிட்டு, "வந்து துணியைக்கூட மாத்தாம படுத்துக்கிட்டாச்சா? துவைக்கறது நானுங்கறதால தானே அப்டி!? நாளைல இருந்து உன் துணியைக் கையால தொடறனா பாரு!!" எனக் கத்த, கதவை மூடிவிட்டு உடைமாற்ற விரைந்தாள் அவள்.
கதவருகே தரையில் கிடந்த அவளது பையைப் பார்த்தவர், அதை எடுத்துவைப்பதற்காகத் தூக்க, கீழே ஒட்டியிருந்த மண் கண்ணில் பட்டது. சந்தேகமாகக் கதவைப் பார்த்துவிட்டு, பையைத் திறந்தார் அவர். உள்ளே அவரைப் பார்த்துச் சிரித்தது ஒரு ஆணின் பணப்பை.
கீதா தலையைப் பிடித்துக்கொண்டார் ஒற்றைக் கையால். மறுகையால் கதவை உடைக்காத குறையாகத் தட்டினார்.
"ஏய் கழுதை!! எங்கடி போய் ஊர்சுத்திட்டு வர்ற!? யாருகூட போன?? என் உயிரை வாங்கறதுக்கே பொறந்து வந்தியா நீ!? கதவைத் திறடீ!!"
சஞ்சனா ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள்.
"ஏம்மா? என்ன நடந்துச்சு!? நீதான துணிமாத்த சொன்ன? அதைக்கூட முழுசா செய்யவிடாம இப்படிக் கத்துற??"
"உங்கிட்ட ஒருவார்த்தை பேசல! இதை உங்கப்பாகிட்டவே நான் கேட்டுக்கறேன்! நடக்கற காவாலித்தனம் தெரியாம பொண்ணை அனுசரிச்சுப் போன்னு என்கிட்ட காலைல உபதேசம் வேற!! வரட்டும் பாத்துக்கறேன். போடி உள்ள, போய் அந்த செல்லுல என்னத்தப் பாப்பியோ, பாரு. இன்னியோட அந்த செல்லை உடைச்சு அடுப்புல போடல.."
தலையுமில்லாமல் வாலுமில்லாமல் அவர் ஏதேதோ கத்த, சஞ்சனா என்னவெனக் கேட்கமுயன்று சோர்ந்தாள். எட்டரை மணிக்கு சாரதி வந்ததும் வராததுமாய் வாசலிலேயே வைத்து அவரிடம் முறையிட்டார் கீதா.
"பொண்ணை திட்டாதன்னு எங்கிட்ட வசனம் பேசினீங்களே.. நான் அப்படி இருந்தப்பவே இவ எங்கயோ ஊரைச் சுத்திட்டு யாரையோ பாத்துட்டுத் தான் வீட்டுக்கு வர்றா! இது என்னான்னு தெரியுதா?"
அவர் தன் முந்தானையிலிருந்து அந்தப் பர்ஸை எடுத்து சாரதியிடம் காட்ட, சாரதி திரும்பி மகளைப் பார்த்தார்.
"என்னம்மா இது?"
சஞ்சனா பெருமூச்சு விட்டாள்.
"இதுதானா..? எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேன்ப்பா. காலைல என்ன நடந்துச்சுன்னா..."
முழுக்கதையையும் அவள் சொல்ல, சாரதி திரும்பி மனைவியைப் பார்த்தார். கீதாவோ இன்னும் கோபம் தலைக்கேற நின்றார்.
"ரோட்டுல பொறுக்கிப் பசங்க அடிச்சுக்கிட்டா, நடுவுல நீ என்னத்துக்குப் போவ? உன் வேலை உண்டுன்னு இருக்கமாட்டியா? நீ சேவை செஞ்சுதான் பழனியில எல்லாப் பேரும் பிழைக்கப் போறாங்களா?"
"ஹான்.. நாளைக்கு நீயோ நானோ ரோட்ல அடிபட்டுக் கிடக்கும்போதும் இதையே பேசறியான்னு பாக்கலாம்..."
"சீ... வாயை மூடு! எதுக்கெடுத்தாலும் இடக்காப் பேசிக்கிட்டு! அவன் குடுத்தா, நீயும் பர்ஸை வாங்கிட்டு வந்துருவியா? நாளைக்கு பர்சுக்கு சொந்தக்காரன் போலீசோட வீட்டுக்கு வந்தான்னா என்னடி பண்ணுவ?"
"எதாவது பேசணும்னு பேசாதம்மா! பர்சுல இருக்கற அடையாளத்த வச்சு அதை ஓனர்கிட்ட சேர்த்துடலாம். இல்லைன்னா போஸ்ட் ஆபிஸ்ல குடுத்துறலாம்."
"குடுத்துத் தொலைய வேண்டியதுதான?"
"நேரமில்ல. நாளைக்குப் போறேன். இப்ப விடறியா?"
அவள் அறைக்குள் செல்ல, கீதா கண்ணைத் துடைத்தவாறே சமையலறைக்குள் சென்றுவிட, சாரதி மகளைப் பின்தொடர்ந்தார் அறைக்குள்.
"லைப்ரரிக்கு மட்டும்தான் போனயா நீ?"
சஞ்சனா லேசாகச் சிரித்தாள்.
"ம்ஹூம். நானும் தீபாவும் பாலசமுத்திரம் போனோமே..!"
"உங்கம்மாவுக்கு ஏத்த திருட்டு ராஸ்கல் தான் நீயும்!"
அவள் சிரித்தாள்.
"அதான் உங்ககிட்ட எல்லாமே சொல்றனே.. அப்பறம் என்ன?"
"ம்ம். நீ சொன்னமாதிரி அடுத்த வருஷமே அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ.. எங்கயாச்சும் வேலைக்குப் போயிடணும். அதுக்குமேல உங்க ரெண்டு பேரையும் இந்தப் பழனிமலை தாங்காது!"
அவரும் சிரித்துக்கொண்டே செல்ல, மீண்டும் மனதில் அமெரிக்கக் கனவுகள் தலைதூக்கிட, பெருமூச்சுடன் விட்டத்தைப் பார்த்துப் படுத்தாள் சஞ்சனா.
அன்றிரவு கீதா சமைக்கமாட்டேனென வேலைநிறுத்தம் செய்துவிட, சஞ்சனாவும் சாரதியும் பிரதான சாலையில் இருந்த கடைக்கு சாப்பிடச் சென்றனர். சாரதி இரண்டு இட்டிலிகள் போதுமென்றுவிட, சஞ்சனா ஒரு ஆனியன் ரோஸ்ட் சொன்னாள். சாப்பிடக் காத்திருந்த நேரத்தில், கடை வாசலில் ஏதோ கைக்கலப்பு நடக்க, சஞ்சனா எழ முயன்றாள். சாரதி அவசரமாக அவளை அமர்த்தினார்.
"ஒருநாளைக்கு ஒரு பிரச்சனை போதும். சும்மா உட்காரு."
எழாமல் அமர்ந்தாள் சஞ்சனா. ஆனாலும் தலையை சாய்த்து வெளியே எட்டிப்பார்த்தாள் அவள். போதையுடன் உள்ளே வரமுயன்ற ஆள் ஒருவனை கடைக்காரர்கள் தடுத்துக்கொண்டிருக்க, வாய்ச்சண்டை நடந்து கைச்சண்டையாக முற்றியிருந்தது. அந்த அழுக்கு சட்டையைப் பார்த்ததும் சஞ்சனா திடுக்கிட்டாள்.
"நான் சொன்னனேப்பா, காலைல ரோட்டுல ஒருத்தனைப் போட்டு அடிச்சான்னு, அது அவன்தான்ப்பா"
சாரதி அருவருப்பாகப் பார்த்துவிட்டு முகத்தை சுழித்துக்கொண்டார்.
"பாக்க சின்ன வயசாத் தெரியுது.. இப்படிக் குடிச்சிட்டு அராஜகம் பண்றான் நாலுபேர் வந்துபோற இடத்துல! இவனைப் பெத்தவங்களுக்கு இதைப்பார்த்தா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப்பாரு."
சஞ்சனா அந்த ஆடவனின் முகத்தை அப்போதுதான் பார்த்தாள்.
இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்குள் இருப்பான் அவன். அதற்குமேல் இருக்க வாய்ப்பில்லை. அழுக்கான சட்டையும், பாதத்தின் அருகே கிழந்திருந்த கால்சட்டையும் அணிந்திருந்தாலும், முகத்தில் ஒருவித அசாத்திய தூய சாயல் தெரிந்தது. போதை படர்ந்திருந்த அவ்விழிகளில் சோகம் நிறையத் தெரிந்தது.
அவன் பார்வை சஞ்சனாவை அடைய, சஞ்சனா இலையை நோக்கித் தலையைக் குனிந்துகொண்டாள். தன்னைப் பிடித்திருந்த சப்ளையர் இரண்டுபேரைத் தரையில் தள்ளிவிட்டவன், கோபமாகச் சென்றுவிட்டான் தன்வழியில். சாரதி இன்னும் முகத்தை சுழித்தே இருந்தார்.
*
மறுநாள் காலை விடிந்தபோது, வழக்கம்போல 'பழநீயப்பா.. ஞானப் பழம் நீயப்பா.. தமிழ்ஞானப் பழம் நீயப்பா..' என கூம்பு ஒலிப்பெருக்கிகள் ராகம் பாடிக்கொண்டிருந்ததில் துயில்விழித்து எழுந்து வந்தாள் சஞ்சனா. அடிவாரத்தில் குடியிருப்பதில் ஒரேயொரு நலன் எதுவென்றால், கைபேசியில் கஷ்டப்பட்டு அலாரங்கள் வைக்கத் தேவையில்லை என்பதுதான்.
இன்றேனோ எழும்போதே அம்மாவின் கழுகுப்பார்வை தன்னைத் தொடர்ந்து வருவதை உணர்ந்தாள் அவள். கேள்வியாக அவள் புருவத்தை உயர்த்த, "இன்னிக்கு நீ வெளிய எங்கயும் போக வேணாம். வீட்டுல வேலை இருக்குது" என்றார் அவர் சாந்தமாக.
"உன் மாடுலேஷனே சரியில்ல. என்ன ஸ்கெட்ச்சு?"
"ஒண்ணும் கிடையாது. நீபாட்டுக்கு ஊரைச் சுத்திட்டு, கண்டகண்ட ஆளுங்களோட பர்சையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவருவ.. அதெல்லாம் வேணாம்னுதான் இன்னிக்கு வீட்டைக் கழுவித் துடைச்சுவிடறதுக்கு உன்னை இருக்கச் சொல்றேன்."
"வீட்டுல வேலைசெய்ய ஒரு அடிமை வேணும், அதான? இருக்கறேன், இங்கயே இருக்கறேன். சந்தோசமா? டிபனாச்சும் போடுவியா, இல்ல வேலை செஞ்சாத்தான் சோறா?"
"பல்லை விளக்கிட்டு வா, அடை வார்க்கறேன்"
"அப்பா.. எங்க போனார்?"
"காலைல நாலு மணி ட்யூட்டி இன்னிக்கு. அவர் எப்பவோ கிளம்பிட்டாரு"
அவள் சரியெனக் குளியலறைக்குச் சென்று அரைமணியில் திரும்பி வந்தாள். காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, வீடு முழுவதும் துடைத்து, சுவரை ஒட்டடை அடித்து, பரண்களில் இருந்த பண்டபாத்திரங்களை எல்லாம் எடுத்துத் தேய்த்துக் கழுவிவைத்து, வீட்டையே புதிதுபோல மாற்றியபோது, மணி மதியம் மூன்று. காலையில் சாப்பிட்ட அடையும் சட்னியும் ஆவியாகியிருந்தன வயிற்றுக்குள்.
"தயவுசெய்து சாப்பாடு இருக்குன்னு நல்லவார்த்தை சொல்லும்மா.. பசி உயிர் போகுது!"
"பத்து நிமிஷம் பொறுக்கமாட்டயா? விசில் வந்துடும். பருப்புச்சோறு தான் வெச்சிருக்கேன்"
பசியில் ருசியெல்லாம் பார்க்காமல் பாதிச் சட்டியை அவளே உண்டு தீர்க்க, கீதா அவளுக்குத் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்.
மெல்லப் பேச்சுவாக்கில், "அமெரிக்காவுல எல்லாம் வீடு எப்படி இருக்கும்? தனியாத்தான் இருப்பியா நீ?" என்றார் அவர்.
சஞ்சனா சிரித்தாள்.
"அங்கயாச்சும் நான் நிம்மதியா இருக்கறனே?"
"இரு, உன் இஷ்டம்போல இரு. யாரு தடுத்தா? எங்களையெல்லாம் கூப்பிட மாட்டியான்னு கேக்க வந்தேன்... நீயே அதுக்கு நல்ல பதிலா சொல்லிட்ட"
மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவர் சோகவசனம் பேச, சஞ்சனா அவரது கையைப் பிடித்தாள்.
"அப்டி இல்லம்மா, உன்னைக் கூப்பிடாம யாரைக் கூப்பிடுவேன் நானு? நான் போய் கொஞ்சநாள் அங்க இருந்து, எல்லாம் செட்டானதும் உன்னையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போறேன்.. சரியா?"
"நான் பழனியிலயே இருக்கறேன்.. பரவால்ல. நீ நிம்மதியா இரும்மா தாயே!"
கண்களை ஆயாசமாகச் சுழற்றிவிட்டு, தட்டோடு எழுந்தாள் அவள்.
"இப்டிப் பொலம்பிட்டே இரு. அப்பறம் நிஜமாவே உன்னைமட்டும் இங்கயே விட்டுட்டுப் போயிடுவோம் நானும் அப்பாவும்"
தட்டைக் கழுவிவைத்துவிட்டு அவள் முகம்கழுவித் தயாராகி வெளியே வர, கீதா சந்தேகமாகப் பார்த்தார்.
லெதர் பர்ஸை எடுத்துக் காட்டினாள் சஞ்சனா.
"போலீஸ் வந்து உன்னைப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்கல்ல? அதுக்குள்ள இதைக் குடுத்துட்டு வந்துடறேன்."
"போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம்--"
"போகல! போகல!! போஸ்ட் ஆபிஸ்ல குடுத்தாலே போதும்!!"
மலையடிவார அஞ்சல் அலுவலகத்தை அடைந்தவள், "பர்ஸ் ஒண்ணை ஓனர்கிட்ட சேர்க்கணும்" என்றவாறு அதையெடுத்து நீட்ட, அலுவலர் ஒருவர் அதை வாங்கிப் பார்த்தார்.
"அட்ரஸ் எதுவும் இல்லம்மா.. அட்ரஸ் இருந்தாத்தான் போஸ்ட்ல அனுப்பமுடியும்"
"எதாவது அடையாள அட்டை இருக்குமே..?"
"எதுவுமே இல்லைங்கறேன்.."
பர்ஸை அவர் நீட்ட, அதுவரை அடுத்தவர் பணப்பையைப் பிரிக்கக்கூடாது என்ற கொள்கையால் அதைப் பார்க்காமல் இருந்தவள், இப்போது உள்ளே பார்த்தாள்.
ஓரிரு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களையும் சில தியேட்டர் டிக்கெட்டுகளையும் தவிர, உள்ளே அடையாள அட்டையோ விலாசமோ எதுவுமில்லை.
"என்ன சார் பண்றது?"
"போலீஸ்ல குடுத்துரும்மா.. அவங்க பாத்துக்குவாங்க"
அவள் மனமின்றி வெளியே நடந்தாள். தீபாவை அழைத்துத் தனக்குத் துணையாகக் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைக்க, அவளும் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னாள்.
.
.
"இதான் டென் மினிட்ஸா?"
அரைமணி நேரம் காந்தி பூங்கா அருகே காத்திருந்து நொந்துபோன சஞ்சனா, ஸ்கூட்டரில் வந்திறங்கிய தீபாவை வினவினாள் தலைசாய்த்து.
"எங்க வீட்டுக்குத் தெரியாம சைலண்ட்டா கிளம்பி வர்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இவ்ளோ சீக்கிரமா வரமுடிஞ்சதேன்னு சந்தோஷப்படு!"
"சரி, வா"
பொடிநடையாக நடந்துசென்று, எதிர்ப்புறமிருந்த காவல்நிலையத்தினுள் இருவரும் செல்ல, முன்னறையில் சில காவலர்கள் அவரவர் மேசையில் இருக்க, அங்கே செந்நிற செங்கல் சுவரோடு சேர்த்துப் போட்டிருந்த நீள பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் சஞ்சனா நேற்றுப் பார்த்த ஆடவன். நேற்றைய அழுக்குச் சட்டைக்கு நேர்மாறாக, வெளிர்நீல சட்டையும் கருப்புப் பேண்ட்டும் அணிந்து, கொஞ்சம் நாகரீகமாகவே அமர்ந்திருந்தான். தலையை சுவற்றில் சாய்த்து, கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
முழங்கையால் தீபாவை இடித்தவள், கண்ணால் அவனைக் காட்டினாள் அவளுக்கு.
"யாரு சஞ்சு, தெரிஞ்சவங்களா?"
"உன் மூஞ்சி! நேத்து ரோட்டுல சண்டை போட்டானே.. அந்த ரவுடிதான் இவன்."
"ஏய், நீ சொன்னதை வச்சு நான் பட்டாசு பாலு, பான்பராக் ரவி, இந்த ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வெச்சிருந்தேன்.. நீ என்னடான்னா இவனைக் காட்டற..!?"
அவர்களது சம்பாஷணையில் கண்ணைத் திறந்தவன் இருவரையும் பார்க்க, சஞ்சனா ஒரு காவலரின் மேசைக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக நின்றுகொண்டு தீபாவையும் இழுத்தாள். தீபாவோ அவனை மேலும் கீழும் பார்த்தவாறு நின்றாள் அங்கேயே.
"என்னம்மா வேணும்?"
ஒரு காவலர் இவர்களைப் பார்த்து வினவ, தன் கையிலிருந்த பர்ஸை அவரிடம் நீட்டினாள் அவள்.
"இதைக் குடுக்க வந்தோம் சார்"
"எங்கம்மா கிடைச்சது?"
சஞ்சனா தயக்கத்தோடு திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அவனும் அடையாளம் கண்டுகொண்டதைப் போல விருட்டென எழுந்துவந்து, காவலரிடம் "இதான் சார்" என்றான்.
"என்னடா சொல்ற? இதுதான் நீ சொன்ன பர்ஸா? ஏம்மா, இந்தப் பர்ஸ் உங்கிட்ட எப்படி வந்துச்சு?"
சஞ்சனா நடந்ததைச் சொல்ல, அவன் ஆமோதித்துத் தலையாட்டினான் காவலரிடம்.
அவர் பர்ஸை வாங்கிக்கொண்டு, அவனிடம் திரும்பி, "இந்த ஒருதடவை சும்மா விடறேன்.. மறுபடி அடிதடியில இறங்குறத பாத்தேன், முட்டிக்கு முட்டி தட்டிருவேன் ஜாக்கிரதை!" என எச்சரித்து விட்டார்.
தீபாவை அழைத்துக்கொண்டு சஞ்சனா வேகமாக வெளியே செல்ல, அவனும் பின்தொடர்ந்து வந்தான்.
"ஒருநிமிஷம்.."
அவள் பயந்து சற்றே விலகி நின்று திரும்பிப் பார்க்க, "தேங்க்ஸ்" என்றுவிட்டு நிற்காமல் தன்வழியில் நடந்து போய்விட்டான் அவன்.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro