Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15. சூரியோதயம்

தஞ்சாவூர் ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றபோது விடியற்காலை. ராஜ் bag ai எடுத்துக்கொண்டு படியிலிருந்து இறங்கினான். ஜூன் மாத கோடை காலத்தில் இந்த விடியற்காலை தான் எவ்வளவு இதமாக இருந்தது. ஆட்டோ பிடிக்காமல் இந்த காற்றில் வீட்டுக்கு நடந்து சென்றால் இருபது நிமிடங்களில் சென்றுவிடலாம் என முடிவெடுத்துவிட்டு நடக்க தொடங்கினான். ஊர் இன்னும் துயிலில் மயங்கி இருந்தது. ஸ்டேஷன் வெளியில் இருந்த தள்ளுவண்டியில் பேப்பர் கப்பில் ஒரு டீ வாங்கி தொண்டையின் தாகத்தை தணித்தான்.

கோவையோடு ஒப்பிட்டால் தஞ்சை சிறிய ஊராக, பரபரப்பின்றி அமைதியாய் தெரிந்தது. பிறந்து வளர்ந்த மண்ணில் பாதம் பதிகையில் காலுக்கு ஊட்டச்சத்து ஏறி வீட்டை நோக்கி விரைந்தது. தென்னை மரங்கள் இவன் வழி முழுக்க தோவையை அசைத்து பழைய சிநேகிதனை வரவேற்றன.கீழ் தெருவில் நுழைந்து நான்காம் வீட்டின் முன்னாள் நின்றபோது அவனை எதிர்பார்த்து மரக்கதவு திறந்திருந்தது. அவசரமாக நாலைந்து புள்ளிகள் வைத்து வரையப்பட்டிருந்த கோலத்தை ஓர் அகல கால் வைத்து தாண்டி வீட்டின் நிலப்படியில் கால் வைத்தான் ராஜ்.

மஞ்சள் பெயின்ட் அடிக்கப்பட்ட வெளி சுவர் மற்ற வெள்ளை வீடுகளிலிருந்து தனித்து தெரிந்தது. அப்பாவின் கைவண்ணம், மிச்சம் இருந்த பெயிண்ட்டை அடித்து வைத்திருந்தார் போலும். ராஜ் வீட்டினுள் அடியெடுத்து வைத்து வீட்டின் ஹாலில் ஒரு ஓரத்தில் முதுகிலும் கையிலும் இருந்த bag களை கீழே வைத்துவிட்டு சமையலறையினுள் நுழைந்தான். முதலில் அம்மா முகத்தைப் பார்க்கவேண்டும் அல்லவா. அவனைப் பெற்ற மகாலட்சுமி இட்லி தட்டிலிருந்து ஆவி பறக்க இட்லியை எடுத்துக் கொண்டிருந்தாள். கிட்சன் தரையில் பள்ளி சீருடையில் ராஜின் தம்பி, சுதர்சன் , அமர்ந்து இட்லியை சாம்பாரில் முக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் தம்பியைப் பார்க்கையில் தானும் நேற்று தான் இப்படி பள்ளி சீருடையில் தரையில் அமர்ந்து ஆவி பறக்க இட்லி சாப்பிட்டது போல் ஓர் உணர்வு. அதற்குள் காலேஜ் முடித்து டிகிரி முடித்து aviation engineer என்று வந்து நின்றான் ராஜ். காலம் அவன் கண் விழித்து இருக்கும்போதே அவனை ஏமாற்றி விட்டு ஓடி விட்டது. மகன் தட்டில் இன்னும் ஓர் இட்லியை வைக்க திரும்பிய மகாலட்சுமி , தன் மூத்த மகன் ராஜ் அங்கு நிற்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியில், " என் தங்கம் எப்படா வந்த?" என முகம் மலர்ந்தாள்.

"இப்ப தான். ஸ்டேஷன் இலிருந்து நடந்து வந்தேன்."

"வானே, நீயும் தட்டையோட தரைல உட்காரு. அம்மா நீ வர்றேன்னு சாம்பார் ஓட சேர்த்து தக்காளி சட்னியும் கார சட்னியும் பண்ணிர்காங்க," என அண்ணனை வரவேற்றான் சுதர்சன்.

"இரு டா, dining டேபிள் ல சாப்பாடு வைக்கிறேன். நீ பல்லு வழக்கிட்டு வந்துரு," என மகாலட்சுமி பரபரப்பு ஆனாள்.

"பசிக்குது, நா தரைலயே உட்கார்றேன். டைம் ஆச்சுல, எழுந்திரி," என தம்பியைக் துரத்திவிட்டு சுவற்றோடு சாய்ந்தான் ராஜ். பல நாள் பின் அம்மாவின் கையில் சாப்பிடும் சந்தோஷத்தில் அதிகமாய் சாப்பிட்டான்.

"அப்பா எங்க?" கார சட்னி பிரமாதமாய் இருந்தது.

"பக்கத்து ஊருக்கு போயிருக்கார். அவர் கீழ வேலை பார்க்குற கார்பெண்டர் ஒரு வாரமா வேலைக்கு வரலைன்னு பார்க்க போயிருக்கார்."

தான் படித்து முடித்து வரும்போது வீட்டில் தன்னை வரவேற்க அப்பா இல்லை என்பதை விட நல்ல வேளை, அப்பா இல்லை என்ற திருப்தியுடன் ராஜ் சாப்பிட, அவன் தாயார் அவன் தட்டில் இட்லிகளை அடுக்கினார். சாப்பிட்டுவிட்டு தன் அறையில் bag களை வைத்துவிட்டு அலமாரியை சோதனைப் போட்டான் ராஜ். நாலைந்து பழைய கைலி, சுருங்கி போன மூன்று சட்டை, towel இல்லை. கோவையில் புதிதாய் ஸ்டைல் ஆக சட்டை pant வாங்கி அணிந்து அதை விடுமுறை நாட்களில் ஊருக்கு கொண்டு வந்து, பின் மீண்டும் காலேஜில் போட திரும்பி எடுத்துக் கொண்டு போய்விடுவான். ஆதலால் அலமாரி வெறுமையாய் அவனை திரும்பி பார்த்தது. bag இல் இருந்த அழுக்கு துணிமணியில் குடைந்து அவ்வளவு அழுக்கில்லாத ஒரு சட்டையையும் pant ஐயும் எடுத்துக்கொண்டு மீண்டும் கிட்சனில் நின்ற அம்மாவிடம் குளத்தில் குளிக்க போவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

"வீட்ல குளி டா ராஜா, வெயில் வந்துட்டுல," என அம்மாவின் பேச்சைக் கேட்காமல் துணியை எடுத்துக்கொண்டு நடந்தான் ராஜ். உண்மையில் இந்த கோடைக் காலத்தில் வெயில் உக்கிரமாக தான் இருந்தது ஆயினும் குளத்தில் தன் பாலிய நண்பர்கள் யாரேனும் இருப்பர் என்ற நப்பாசையில் வெயிலையும் தாங்கிக்கொண்டு குளத்தை வந்தடைந்தான் அவன். குளநீர் கண்ணாடி போல் வெயிலில் மின்னியது. ஒரு காகம் கூட இவ்வெயிலை சந்திக்க தைரியமின்றி ஒளிந்திருந்தன. குளத்தில் இவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதைக் கண்டதும் விரைவாய் நடந்து வந்த கால்கள் இப்போது தோய்வடைந்தன. பெருமூச்சுடன் ராஜ் தன் அதிர்ஷ்டத்தை திட்டிவிட்டு குளத்தில் இரு முறை முக்கி எழுந்து அவசரமாய் சோப்பு போட்டு கைலியும் சட்டையும் மாற்றி ஈர கைலியை தோளில் போட்டுக்கொண்டு குளத்திலிருந்து கிளம்பினான். எதற்கும் டீ கடையில் பார்த்துவிட்டு போகலாம் என வேறு சந்தில் நுழைந்து கடைக்கு வந்தான் ராஜ். அவனை தூரத்தில் கண்டுக்கொண்ட அவனின் நண்பன், மைக்கல், ராஜை அன்புடன் தழுவிக்கொண்டான்.

"மச்சா, காலேஜ் இலிருந்து எப்படா வந்த ? எத்தன நாள் லீவு?" என விசாரிக்க "காலைல தான் வந்தேன். இனிமே எல்லா நாளும் லீவு தான் டா," என ராஜ் சிரித்தான்.

"மத்தவங்களாம் எங்க டா?"

"யாரு? அவனுங்களா? பாண்டி மெடிக்கல் கடைல நிக்கிறான், அமீர் துபாய் கு போனது தான் உனக்கு தெரியுமே. இன்னும் அவனுக்கு லீவு கிடைக்கல. இதோ, நான் இருக்கேன். என் அண்ணன் சென்னைல பைக் கடைல நிக்கிறான்." மைக்கல் ஆளுக்கு ஒரு வாக்கியமாய் ஒவ்வொருவரின் தலை எழுத்தை கூறினான்.

"டேய், உன் மூஞ்ச தான் பார்க்கனுமா? இதுக்கு நான் ஸ்டேஷன் லையே இன்னொரு ட்ரைன் எடுத்து திரும்ப கொயம்புத்தூர் போயிருப்பேனே."

"சொல்லுவடா சொல்லுவ. சரி வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க? படிச்சு முடிச்சிட்டு வந்துட்டியல்ல?"

"ஆ, முடிச்சுட்டேன். அப்பா வீட்ல இல்ல இன்னைக்கு."

"இன்னைக்கு தான வந்த, வீட்ல மட்டன் சமைச்சு வச்சிருப்பாங்க. நல்லா ஒரு வெட்டு வெட்டு. சாயந்திரம் தோட்டத்துக்கு வா. கிரிக்கெட் விளையாடுவோம்."

"கிரவுண்ட் என்னாச்சு?"

"அதெல்லாம் ஒரு வருஷத்துல என்ன என்னமோ ஆச்சு. நீ அப்புறம் வா பேசலாம்." என மைக்கல் தன் நண்பனை உடனடியாக தன் நேரத்திலும் பொழுதுபோக்கிலும் இணைத்துக்கொண்டான். இந்த வெயிலில் நின்று பேச இயலாது என இருவரும் விடைப்பெற்றுக்க்கொண்டு கிளம்பினர். மைக்கல் தன் வேலையைக் கவனிக்க ராஜ் வீட்டுக்கு சென்றான். மைக்கல் சொன்னது போல் மட்டன், நெய் சோறு, கத்தரிக்காய் என சமைத்துவைத்து தன் அன்பைக் கொட்டினாள் மகாலட்சுமி.

சாயந்திரம் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடியதில் மற்ற நண்பர்களை சந்தித்தான் ராஜ். விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து கை கால் கழுவி விட்டு சட்டையைக் கழட்டிவிட்டு ஹாலில் டிவியின் முன் உட்கார்ந்தபோது அவன் அம்மா சொன்னாள், "ராஜா, உன்னோட காலேஜ் friend ஆமே, வீட்டுக்கு போன் வந்துச்சு.வினோ நு பெயர் சொன்னான். நீ அவனோட சாமான் எதையோ எடுத்துட்டு வந்துட்டியாமே. ஏன் டா, ரூம் clean பண்ண தான extra ஒரு வாரம் இருந்த. உன் பிரென்ட் ஓடத ஏன் pack பண்ண?" மகாலட்சுமி அவள் பாட்டு பேசிக்கொண்டே போனாள்.

டிவியின் கருப்பு திரையை பார்த்துக்கொண்டே ராஜ் உட்கார்ந்து இருந்தான். இன்னும் அதிர்ச்சி குறையவில்லை. அவனுக்கு தெரியும் யார் வினோ என்று ஆனால் அம்மாவுக்கு தெரியாதே. வீட்டுக்கு போன் செய்துவிட்டால் அதுவும் ஒரே நாளில்.


(Yay, I'm back to Raj and Vino's story. For men, cricket is a social gathering, a place to network that women don't get. பிரச்சனையா, கிரிக்கெட் கிரௌண்ட் கு போ, எவனாவது இருப்பான், அவனுக்கு யாரையாவது தெரிஞ்சி இருக்கும். சோகமா இருக்கியா? கிரௌண்ட் கு போ. கிண்டல், கேலி, நு டைம் போறதும் சோகம் போறதும் தெரியாது. bore அடிக்குதா? கிரௌண்ட் போ. எவனாவது சும்மா இருப்பன். பேசிட்டு இருக்கலாம். வீட்ல சண்டையா? கிரௌண்ட் கு போ. வீட்ல எதுக்கு உட்காரனும். டீ கடை, கிரிக்கெட் கிரௌண்ட் நு இதெல்லாம் ஆண்களுக்கான இடம்.

பெண்களுக்கு இப்டி ஒரு இடம் இல்லை. வீட்ல சண்டையா? வீட்ல தான் உட்கார்ந்து இருக்கணும். bore அடிக்குதா? அங்க தான். )


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro