Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அமிர்தசாகரம் -முன்னோட்டம்


அச்சிறுமி திடீரென யாரோ கரம் பற்றி இழுத்து வந்ததில் மருண்டு விழித்தவள் அவனை பயத்துடன் நோக்க அவளது முட்டைக்கண்கள் விரிந்த விதத்தில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் வித்யாசாகர்.


அவள் இப்போது பயத்தை விடுத்து கண்ணை உருட்டி அவனை முறைக்கவும்


"ஏய் முட்டக்கண்ணி முழியழகி! என்ன முறைக்குற? நீ முறைச்சா நாங்க பயந்துடுவோமா? நான் மட்டும் வரலனா நீ அந்த ஆழத்துல காலை வச்சு இந்நேரம் ஜலசமாதி அடைஞ்சிருப்ப" என்றான் கேலியாக.


அவள் கண்களை விரித்து "அப்பிடியா? எனக்கு அங்க ஆழமா இருக்கும்னு தெரியாது" என்றவள் திடீரென முகத்தைச் சுளித்துவிட்டு "என் நேம் ஒன்னும் முட்டைக்கண்ணி முழியழகி இல்ல... அமிர்தவர்ஷினி" என்று சொல்லிவிட்டுப் பிடிவாதமாய் உதடு இறுக நின்றாள்.


வித்யாசாகர் அவள் தலையில் தட்டியவன் "அஹான்... நீ தான் அமிர்தவர்ஷினினு எட்டூருக்கு நேம் வச்சிருக்கியே... அதை சொல்லிக் கூப்பிடுறதுக்குள்ள விடிஞ்சு போயிடும்" என்று அங்கலாய்க்க


"அப்போ அம்முனு கூப்பிடுங்க... அந்த முட்டக்கண்ணி எனக்குப் பிடிக்கல" என்று மூக்கைச் சுருக்கு அவள் சொல்லும் போதே "வித்தி அண்ணா" என்ற கூவலுடன் மேகவர்ஷினி அங்கே ஓடி வந்தாள்.


அங்கே இருவரும் நிற்பதைப் பார்த்தவள் வேகமாக அவர்களை நெருங்கி "வித்தி அண்ணா இவ தான் அம்மு அக்கா... அக்கா இவங்க என்னோட வித்தி அண்ணா" என்று பெரிய மனுஷி போல இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தாள்.


அமிர்தா மேகாவைப் பார்த்துச் சிரித்தவள் "இவங்க கூட தான் நீங்க எல்லாரும் விளையாடுவிங்களா? என்னையும் உங்க கூட சேர்த்துப்பிங்களா? வித்தி அ...." என்றவளின் வாயை அவசரமாகப் பொத்தினான் வித்யாசாகர்.


"நீ என்னை அண்ணானு கூப்பிடக் கூடாது அம்மு..." என்று அவன் சட்டென்று சொல்லவும் அந்தச் சிறுமி புரியாது விழிக்க


"இந்தக் குட்டிப்பசங்களுக்கு மட்டும் தான் நான் வித்தி அண்ணா... ஹரியும் சம்முவும் கூட என்னை வித்தினு தான் கூப்பிடுவாங்க... நீயும் வித்தினு கூப்பிடு... நீ இவ்ளோ பெரிய பொண்ணா இருந்துட்டு என்னை அண்ணானு கூப்பிட்டேனா எனக்கு என்னமோ வயசான ஃபீலிங் வருது... நீ என்னை அண்ணானு கூப்பிடா நானும் உன்னை முட்டக்கண்ணி முழியழகினு கூப்பிடுவேன்" என்று சொல்லிவிட அமிர்தா வேகமாக தலையாட்டி மறுத்தாள்.


**********


"ஆனா அவ பண்ணுன காரியத்த நான் இன்னும் மறக்கல... ஏதோ நம்ம குடும்பமும் அருணாசலம் மாமா குடும்பமும் நல்லவங்களா இருக்கப் போய் என்னைச் சந்தேகப்படல... மொத்த அம்மன் சன்னதியும் பேசுனது உண்மைனு நீங்க எல்லாரும் நினைச்சிருந்தா என் நிலமை என்னாகிருக்கும்?" என ஆவேசமாய் மொழிந்தவள் மாமனார் ஹாலுக்கு வரவும் அமைதியானாள்.


சதாசிவமும் ஜானகி பேசிய அனைத்தையும் கேட்டு விட்டார் தான். மருமகளின் ஆதங்கம் எந்தளவுக்கு நியாயமானதோ அதே அளவு அருணாசலம் பேத்தியின் மீது கொண்ட பாசத்தால் மனமுருகி மகள் செய்த தவறை மன்னித்ததும் நியாயமானதே என புரிந்து கொண்டார் அவர்.


**********


அப்போது அந்த சம்பாஷனையினூடே இடையிட்ட ரகுநாதன் "நல்லா யோசி அம்மு... உனக்கு தாத்தாவ மாதிரி பெரிய அக்கவுண்டெண்ட் ஆகணுமா? இல்ல மாமாவ மாதிரி பெரிய ஆடிட்டர் ஆகணுமா?" என்று கேட்க


"ஆடிட்டர்னா அக்கவுண்டெண்டை விட பெருசா ரகு மாமா?" என சந்தேகத்துடன் வினவினாள் அமிர்தவர்ஷினி.

அவளது சிகையை வருடிக் கொடுத்தபடியே "ஆமாடா அம்மு... நீ பேலன்ஸ் ஷீட் ஒர்க் அவுட் பண்ணிருக்கியா?" என்று கேட்க அவள் ஆமென தலையாட்டினாள்.


"அந்த பேலன்ஸ் ஷீட்ல ஆடிட்டர் கையெழுத்து போட்டா தான் அதுக்கு மதிப்பே" என்றவர் பட்டயக்கணக்குப்படிப்பின் முக்கியத்துவத்தை வரிசையாக அடுக்க நிதானமாக கேட்டுவிட்டு


"எனக்கும் ஆடிட்டர் ஆக ஆசையா இருக்கு மாமா" என்றவளுக்கு மனதில் அப்போதே அந்தப் படிப்பின் மீது காதல் வந்துவிட்டது.


*********


ஜானகி தனது தவப்புதல்வனை ஒல்லிக்குச்சி என அவள் கேலி செய்ததில் கடுப்பாகி விட மாமனாருடன் டெக்ஸ்டைல்சிலிருந்து திரும்பிய மைந்தனிடம் புலம்பித் தீர்த்துவிட்டார் அவர்.


"உன்னையும் தான் திருநெல்வேலிக்கு அனுப்பி படிக்க வைச்சோம்... நீ படிச்ச காலேஜும் அவளோடது மாதிரி ரொம்ப பேமஸ் தான்... ஆனா நீ என்ன அவளை மாதிரி தலை கீழவா நடக்குற வித்தி?"

"மா! நான் படிச்சது டிகிரி... அவ புரொபசனல் கோர்ஸ் படிச்சிருக்கா... சோ கொஞ்சம் ஆட்டிட்டியூட் காட்ட தான் செய்வா"


"அதுக்குனு இவ்ளோ திமிரு ஆகாதுடா அவளுக்கு... இத்துணூண்டு இருந்தப்போ ஊமைக்கோட்டானாட்டம் இருந்துட்டு இப்போ வாயைத் திறந்தா தேள் கொடுக்கு மாதிரில்ல கொட்டுறா! எல்லாம் அருணாசலம் மாமா குடுக்குற இடம்... இதுல பாக்குறதுக்கு வேற கண்ணுக்கு லெச்சணமா இருக்குற திமிரும் சேர்ந்துடுச்சு அவளுக்கு"


***********


"அதுவும் சரி தான்... ஆனா மேகா பொண்ணு உன் மருமகளா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ஜானு... அவ இருக்குற இடத்துல கலகலனு சிரிப்புச்சத்தத்துக்குக் குறையே இருக்காதுல்ல"


அவருக்குப் பதில் சொல்ல ஜானகி வாயெடுக்கும் போதே இடையிட்டது ஒரு ஆண் குரல். அது வேறு யாருமல்ல! வித்யாசாகர் தான்.


"என்ன அத்தை இப்பிடி சொல்லுறிங்க? மேகா என் தங்கச்சி மாதிரி... அவளையும் சம்முவையும் நான் வேற வேறனு நினைச்சதே இல்ல... அவளைப் போய் நான் எப்பிடி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவுமில்லாம எனக்கு அம்மு கிட்ட பிடிச்சதே அவளோட சாந்தமான குணம் தான். அவ மேகா மாதிரி எல்லார் கிட்டவும் சகஜமா பேசுற டைப் இல்ல.. மனுசங்களோட குணத்தைப் பாத்து, யோசிச்சு தான் அவங்க கூட பழகவே ஆரம்பிப்பா... அவளோட இந்தப் பழக்கம் தான் எனக்கு அவ கிட்ட ரொம்ப பிடிச்சதே! முக்கியமா பெரியவங்களை மதிக்கத் தெரிஞ்சவ... அதனால தான் தாத்தால இருந்து அப்பா வரைக்கும் எங்க காதலுக்கு எந்த தடையும் சொல்லல"


அதைக் கேட்டதும் அமிர்தாவுக்குத் தன் மேல் யாரோ மலர்களைக் கொட்டியது போல இருந்தது.

*************


ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

மீண்டும் நானே

இது ஸ்ரீ பதிப்பகம் மூலமா புத்தகமா வந்த என்னோட மூன்றாவது கதை...

நன்றி🙏

நித்யா மாரியப்பன்🦋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro