விமர்சனம்
நிஜம் பேசுவோம்.
யாருக்குத்தான் விமர்சிக்கப் பிடிக்காது? நம்மைச் சுற்றியுள்ளவரை விமர்சிப்போம், அவர்களது வாழ்க்கை முடிவுகளை விமர்சிப்போம், சாலையில் வண்டியோட்டிச் செல்லும் இளைஞனை விமர்சிப்போம். ஒரு புது சினிமாவோ, புது பாடலோ, இல்லை ஒரு புத்தகமோ; நாம் நுகர்ந்துவிட்டால், அதைப்பற்றிய நான்கு வார்த்தைகளையாவது அருகே உள்ளவரின் காதில் போட்டு வைப்போம். அறிவுரை வேறு தருவோம், "அந்தப் படமா.. மொதல் அரைமணி நேரம் ஒண்ணும் புரியாது.. போகப் போக புரியும். ஒரு டைம் பாக்கலாம்" என்று.
எத்தனை எத்தனை ரிவ்யூ சேனல்கள் யூட்யூபில்! எத்தனை ரியாக்சன் வீடியோக்கள், எத்தனை டீ-கோடிங் வீடியோக்கள்! "கேமரா ஆங்கிளை மாத்தியிருக்கலாம்.. காஸ்ட்யூமை மாத்தியிருக்கலாம். பாட்டை கட் பண்ணியிருக்கலாம்.. ஃபைட் சீனை நீளமாக்கி இருக்கலாம்.." என்றெல்லாம் பேசும் மேதாவிகள்.
விமர்சனம் ஆரோக்கியமானது தான். ஆனால் அது தரப்படும் விதம் முக்கியம். அடுத்தவர்களை சரமாரியாகக் குறை கூறுவது நம்மை புத்திசாலி ஆக்கிவிடாது.
நமது கருத்துக்களைப் பகிர்வது, அந்தக் கலைஞரை முன்னேறச் செய்யும் வகையில் இருந்தால்தானே, அவரிடமிருந்து இன்னும் நல்ல படைப்புகள் பிறக்கும்? முளையிலேயே ஒருவரின் கற்பனையை விமர்சனம் என்ற பெயரில் தீயிட்டுக் கருக்கிவிட்டால்?? அந்த விருட்சம் எப்படி வளரும்?
Constructive criticism என்பது, நிறைகுறைகளை எடுத்துரைத்து, முன்னேற உதவுவது. தோளில் தட்டிக் கொடுப்பது போன்றது. அதைத்தான் நான் முதற்கொண்டு அனைத்து படைப்பாளிகளும் எதிர்பார்ப்பது. அன்பான தொனியில் நிறைகுறைகளை சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்ளவும் தொடர்ந்து செய்யவும் ஆர்வம் வரும்.
அனைத்துக் கலைகளும் பிறக்குமிடம் அன்பான உள்ளம் தான். நமக்குக் கிடைத்த வாய்ப்பில், அடுத்தவரை மகிழ்விக்க நினைத்துத் தங்கள் திறமைகளைக் கலையம்சங்களாக வழங்குகின்றனர் படைப்பாளர்கள். நமக்கு அது பிடித்திருந்தால் இரண்டொரு வார்த்தைகள் பாராட்டலாம். அன்பைக் கொடுப்பதால் குறைந்துவிடாது; மாறாக வளரும். உங்களுக்கு அந்தத் துறையில் ஏதேனும் அனுபவம் இருந்தாலோ, அதில் பழக்கமுள்ளவராய் இருந்தாலோ, அவர்களுக்கு அறிவுரைகள் தந்து வளர வைக்கலாம். நீங்கள் ஊற்றும் நீரைக் குடித்து வளரும் ஒரு செடியைக் கண்டால் மனதில் மகிழ்ச்சி தானே பிறக்கும்?
ஏன் இத்தனை அட்வைஸ் என்று கேட்கிறீர்களா?
இன்று யதேச்சையாக அமேசானின் 'யாதுமாகி' புத்தகத்தின் விற்பனைப் பக்கத்தைக் காண நேரிட்டது. வேறு எதற்காகவோ அமேசான் செயலியைத் திறந்தபோது, அங்கே கொண்டுவிட்டது. கிட்டத்தட்ட இருபது பேர் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தனர்.
'Good', 'nice' போன்ற ஒற்றை வார்த்தை விமர்சனங்களுக்கு இணையாக, பத்தி பத்தியாகவும் எழுதியிருந்தனர் வாசகர்கள். பார்த்தபோது தானாக ஒரு பெருமிதப் புன்னகை வந்தது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் அமேசானில் அதைப் பதிவேற்றியிருந்தோம். முதல் நாளிலிருந்தே நிறையப் பாராட்டுக்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கித் தந்த நூல் அது.
அதை நினைத்தபோது, அப்போது நடந்த கசப்பான அனுபவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது. நம் மனசு எப்போதும் அப்படித்தானே!
யாதுமாகி புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்குத் தெரியும். நான் மதித்த ஒரு தேர்ந்த எழுத்தாளர் அப்புத்தகத்தை ஒரே வரியில் சரியில்லை எனக் கூறியபோது நான் தளர்ந்துபோனது. ஆனால் அதன்பிறகு வாட்பேட் இந்தியா விருது அதற்குக் கிடைத்தபோது சுயசந்தேகங்கள் கொஞ்சம் குறைந்தது. நம்மிடமும் திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை வந்தது.
அதெல்லாம் பழைய கதைதான். ஒரு வருடமே ஓடிவிட்டதல்லவா!? ஆனால் இப்போதும் அந்தப் பிளவிற்குக் காரணமாக விமர்சனம் வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.
வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எங்கள் பாட்டி, "பல் உடைவதும் நாக்கால, பல்லாக்குல ஏறுவதும் நாக்கால" அப்டினு சொல்லுவாங்க. வார்த்தைகளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஆரோக்கியமான விமர்சனம் எப்படி செய்யலாம் என்பது (எனக்குத் தெரிந்தவரை) இப்படித்தான்:
1) நமது மேதாவித்தனத்தை நிரூபிக்க விமர்சனம் செய்யத் தேவையில்லை. படைப்பாளிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்குமாறு செய்தல் நலம்.
2) முதலில் நிறைகளைக் கூறி ஆரம்பித்து, பின் குறைகளை சொல்லலாம்.
3) பொதுவான தளங்களில் பாராட்டுக்களையும், பின் தனியான, பர்சனலான தளத்தில் குறைகளையும் சொல்லலாம்.
4) ஆஹா ஓஹோ எனப் பாராட்டச் சொல்லவில்லை. பிடித்திருந்தால் 'குட், நைஸ்' போன்ற ஒரு வார்த்தை விமர்சனங்கள் கூடப் போதும்.
5) படைப்பாளியும் உயிருள்ள, உணர்வுள்ள மனிதர்தான் என்பதை எல்லா விமர்சனத்திற்கு முன்னும் நினைவில் கொள்வோம்.
6) இன்னும் ஒரு படி மேலே போய், படைப்பாளியின் அனுமதி பெற்று விமர்சனம் வழங்கலாம், உங்களிடம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஏதேனும் இருந்தால், அவரிடம் தனியாக சொல்லலாம்.
7) நமக்கு அந்தப் படைப்பு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கொஞ்சம் கூட. என்ன செய்வது? கடந்து போய்விடலாம். உலகின் எண்ணூறு கோடிப் பேரில் யாரோ ஒருவருக்கு அது பிடித்திருக்கலாம். படைப்பாளிக்கு அது பிடித்திருக்கலாம்; அவர் மனதுக்கு நெருங்கிய யாருக்காவது அது பிடித்திருக்கலாம். அதை விமர்சித்துக் குறைகூறும்போது, அதைப் பிடித்திருந்த மற்றவர்கள் காயப்படுவார்கள் அல்லவா?
அவ்வளவேதான். சுலபம்தானே இது? நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் சில கணங்களும், சிந்தித்து செய்யும் செம்மையான செயல்களும் மக்களுக்கு மகிழ்ச்சியைச் தருமெனில், அதை செய்வோமே!
சரி, நான் எப்படி விமர்சனம் செய்வேன்?
ம்ம்.. ஒரு படம் பிடித்திருந்தால், நண்பர்களிடம் அதைப் பற்றிப் பேசுவேன். ஒரு பாடல் பிடித்திருந்தால் சமூக தளங்களில் அதை சொல்வேன். உணவகத்தில் ஒரு உணவு வகை பிடித்திருந்தால் பில் கட்டும்போது சில வார்த்தைகள் சொல்வேன். ஒரு புத்தகம் பிடித்திருந்தால், அதை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பேன். படைப்பாளர் எட்டப்படும் இடத்தில் இருந்தால் ( சமூக வலைத்தளங்கள், சந்திக்கும் தூரம்) நிச்சயமாகப் பாராட்டுவேன். விசிறிக் கடிதம் எத்தனை எழுதியிருக்கிறேன் தெரியுமா, பதில்தான் வந்ததில்லை.
வாட்பேடில் constructive criticism நிறைய வரும் எனக்கு. அதற்கு நன்றியுடைத்துள்ளேன். என் புத்தகங்களுக்கு, ஒரு வாசகரின் கண்ணோட்டத்தில் நான் விமர்சனம் செய்வேன். Assessment என்று கடைசி அத்தியாயத்தில் செய்வேன். அடுத்தடுத்த கதைகளுக்கு அது உதவும். வளரும் எழுத்தாளர்களும் நேரமிருந்தால் அதை செய்யலாம். சுய விமர்சனம் மிக மிக ஆரோக்கியமானது. பயனளிப்பது. அது உங்களை தலைக்கனம் பிடித்தவராக எல்லாம் மாற்றிவிடாது. ஒரு பார்வையாளராக இருந்து உங்கள் படைப்பைப் பார்க்க அது உதவும். நம் கதைகளை நாம் ரசிக்கவில்லையெனில் யார் ரசிப்பார்?😁😋😎
இப்ப கொஞ்சம் தற்பெருமை😜
மெய்மறந்து நின்றேனே: எழுதுவதற்கு ஒரு ரிகர்சல் மாதிரி எழுதிப் பார்த்தது. பெரிதாகக் கருத்து என்று எதுவும் இருக்காது. ஆனால் முழுக்க முழுக்கக் காதல் இருக்கும். பார்வைகள், முத்தங்கள், ஊடல்கள், என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் வைத்து எழுதியிருப்பேன். 'விஷ்வா' கதாப்பாத்திரம் 'விஜய் தேவரகொண்டா' மீது மையலுற்று இருந்தபோது எழுதியது. க்ரஷ் என்று சொல்லலாமோ? ஹிஹி. விரசமில்லாத ஒரு காதல் கதை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், அதை எழுதினேன் நான். மருத்துவப் படிப்பு இரண்டாம் ஆண்டில் சேர்ந்த புதிதில். ஒரு நாளுக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதுவேன்.
பின் 'யாதுமாகி' மருத்துவப் படிப்பின்மீது மையலுற்று இருந்தபோது எழுதியது! பன்னிரெண்டாம் வகுப்பிலேயே ஒரு பழைய டயரியில் பிரகதி-நிவீஷின் கதாப்பாத்திரங்களைப் பற்றியெல்லாம் எழுதி வைத்திருந்தை மீண்டும் தோண்டி எடுத்து, கதையாய் வடித்தது. இன்று வரை ப்ரகதி மீது மட்டற்ற மரியாதை எனக்கு. தன்னம்பிக்கையான, தைரியமான பெண்களை, திமிர் பிடிச்சவ என்று ஒதுக்கிவிடும் ஆணாதிக்க சமூகத்தின்மீது ஒரு ஆயுதமாகவே ப்ரகதியை உருவாக்கினேன். நிவீஷும் ஆண்களில் ஒரு அதிசயப் பிறவி. நிஜ உலகத்தில் கொஞ்சம் அரிதுதான். ஒத்துக்கிறேன்.
அமுதனும் மெல்லினாவும் என்னுடைய 'ஃபேன்டஸி'. ஒரு பெண்ணிற்குத் திருமண உறவில் சம உரிமை தரும் ஆண். சதா சண்டை போட்டாலும் பொறுத்துக்கொள்ளும் கணவன். பொதுவாக நாவல்களில் பெண்களுக்குத் தரப்படும் பாத்திரத்தை நான் ஆணுக்குத் தந்தேன். சண்டையில் சாரி கேட்கும் பாத்திரத்தை. மனைவி நிலையான வேலை பார்க்கும்போது தான் நிலையற்ற வேலையை செய்யும் பாத்திரத்தை. சமைக்கவும், வீட்டு வேலைகள் செய்யவும் தெரிந்த பாத்திரத்தை. ஆனால் நிறையப் பேருக்கு அது ஒப்பவில்லை. மெல்லினா மீது ஏகப்பட்ட வெறுப்பு. எனக்குச் சிரிப்பு. கதையில் எதிர்த்துப் பேசும் பெண்ணையே ஏற்றுக்கொள்ளச் சிரமப்படும் இவர்களா பெண்ணியத்தை உணரப்போகின்றனர்!? அமுதன் மாதிரி ஆண்கள் ஊருக்குப் ஆயிரம் பேர் இருப்பார்கள். நாம்தான் பார்ப்பதில்லை. பொண்டாட்டி தாசன் என நக்கலடித்து ஒதுக்கிவிடுவோம். நான் கண்கூடாக எத்தனையோ அமுதன்களைப் பார்த்திருக்கிறேன். பெருமையும் பட்டிருக்கிறேன்.
காவ்யா-சக்தி: ஒரு எக்ஸ்பெரிமெண்ட். தன் பெண்ணுரிமையைத் துறக்காமல் ஒருவனைக் காதலிக்க முடியுமா ஒரு பெண்? முடியும் என எழுதியதுதான் வண்ணங்கள். காதலை வெறுக்கும் சக்தி, ஒரு சராசரி நாவல் நாயகன்தான். எல்லாக் கதைகளிலும் அப்படித்தானே அறிமுகமாவான் நாயகன்? ஆனால் காவ்யா அப்படி அவன்பின்னால் ஓடி ஓடிச் சென்று காதலிக்கும் ரகமல்ல. படித்தால் புரியும்😉. காதலை மதிக்கத் தெரிந்த கதாப்பாத்திரங்களோடு, மிக மிக இயல்பாக எழுதிய கதை இது. காலேஜ் கலாட்டாக் கதை. வினோத்தும் பாவனாவும் என் ஃபேவரிட்.
நீயன்றி வேறில்லை முற்றிலும் எனது வழக்கமான கதைத்தலத்திலிருந்து மாறுபட்டது. மர்மம் மற்றும் குற்றப்பின்னணி வைத்து எழுதப்பட்டது. முதலில் அந்த யோசனை இல்லை. வெறும், அமெரிக்கா ரிட்டன் நாயகன், நம்மூர் நாயகி என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் இரண்டொரு அத்தியாயங்கள் எழுதியபோது, நிறையப் பெண்ணியம் பேசலாம், கருத்துக்கள் சொல்லலாம், வேறுமாதிரி எழுதலாம் என்றெல்லாம் தோன்றிட, சரியென எழுதிவிட்டேன். வானதி எழுதும்போது பொன்னியின் செல்வன் மீது மையல் கொண்டிருந்தது மனது. குந்தவையின் குணமும், வானதியின் பெயரும் கொண்ட பாத்திரம்தான் நமது வானதி. The perfect feminist. காபி போடுவது முதல், பைக் ஓட்டுவது வரை, திவாகருக்குக் கற்றுத் தருவது அவள்தான். எல்லா சஸ்பென்ஸ் தொடர்களிலும், வெறும் காதலியாக மட்டும் தலையைக் காட்டிச் செல்லும் பெண்களைப் பார்த்துப் பார்த்து வெறுப்புத் தட்டிவிட்டது. இம்முறை வானதிதான் விடைகளைத் தேடுபவள். குற்றத்தைக் கண்டுபிடிப்பவள். எழுதிய எனக்கு ஆத்ம திருப்தி.
உயிர்வரை தேடிச்சென்று- அப்பப்பா.. ஒரு கதை எழுதறக்குள்ள எத்தனை சிக்கல் மனுஷனுக்கு!! ஒரு வருஷமா எழுதிக்கிட்டே இருக்கேன்.. முடிஞ்ச பாடில்லை. ஆனா உறுதியா சொல்றேன்.. இதுவரை நீங்கள் படித்த கதைகளை விடவும், முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும் இது!! ரேணு.. an unstable character. பொதுவாக ஆண்களுக்குச் தான் கதைகளில் அம்மாதிரிப் பாத்திரங்கள் வழங்கப்படும். நாம்தான் பார்த்திருப்போமே.. இலக்கின்றி சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, ஒரு பொண்ணைப் பார்த்ததும் விழுந்து அவள்பின்னால் சுற்றி அவளுக்காகத் தன்னை சீர்திருத்திக் கொள்வாரே! ஒரு பெண் அம்மாதிரி வாழ்ந்து, சீரான ஒரு ஆண்மகனைக் கண்டு, தனது வாழ்க்கையை சரிசெய்துகொள்ள நினைத்தால்? கதையில் காணுங்கள்.
அப்பறம் என்னோட பர்சனல் ஃபேவரிட். கொஞ்சம் காதல், கொஞ்சம் காபி. ஆன்த்தாலஜி கூட எழுத முடியும் நம்மளாலன்னு ஒரு நம்பிக்கைக் கொடுத்த சிறுகதைத் தொகுப்பு. முழுக்க முழுக்க க்யூட், ஸ்வீட் மொமண்ட்ஸ். நிறைய பேச்சு, நிறைய காபி நறுமணம். Feel good type.
பிறகு மக்களே, இன்னொரு கதையும் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. இங்க இல்ல, ப்ரதிலிபி தளத்துல. தயவுசெய்து அடிக்க வர்றாதீங்க😆😅.
உன் மனச் சிறையில். 'உயிர்வரை' கதையை ஆரம்பிக்கும் முன்னால் இதைத்தான் அடுத்த கதையா எழுத நினைச்சிருந்தேன். ஆனா ஒரு கலந்துரையாடல் காரணமா முடிவு மாற்றப்பட்டது. இந்தக் கதையும் கொஞ்சம் சஸ்பெண்ஸ் த்ரில்லர் தான். நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும். இங்கே அக்கதையைப் பதிவிட வேண்டுமென்றால் தெரிவிக்கவும்.!!
என்னைப் பொறுத்தவரை, விமர்சனங்களை எதிர்கொள்ள எப்போதும் தயார்தான், அது விஷமாக வெளிவராத வரையில். உங்கள் கருத்துக்களை தாராளமாகக் கூறுங்கள். படித்துப் பார்க்காமலேயே நன்றாகயில்லை என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லை பாத்துக்கங்க!😅
உங்களது விமர்சனங்கள் தான் என்னை வளர்க்கும்.
பேசுங்கள் கதைகளோடு!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro