சீரியஸ்லீ?
சமீபத்தில் பார்த்த தமிழ்த் திரைப்படம்: நித்தம் ஒரு வானம். அதைப் பார்க்கும்போது தோன்றிய சில கருத்துக்கள்.
வழக்கம்போல, SPOILER ALERT! (படம் வந்து ஒரு மாசம் ஆச்சு! இனியும் பாக்கலைன்னா, உங்களுக்கு ஸ்பாய்லர் தர்றதுல தப்பே இல்ல!!)
அசோக் செல்வனை அவரது முதல் படத்திலிருந்து காதலித்துக்கொண்டு வரும் பெண்களில் அடியேன் முதலிடம். வித்தியாசமான கதைத்தேர்வு, யதார்த்தமான ஆனால் Charming-ஆன நடிப்பு, கனிவான கண்கள், ஆழமான குரல், நல்ல humour sense.. என சொல்லிக்கொண்டே போகலாம். அதே எதிர்பார்ப்போடுதான் இந்தப் படத்தையும் பார்க்கத் தொடங்கினேன்.
அர்ஜுன் ஒரு introvert. ரொம்ப ரொம்ப தயக்க சுபாவம். உடன் OCDயும் கூட. Germaphobic-ஆக வேறு இருக்கிறான். ஆனால் அவனைப் போல க்யூட்டான இளைஞனை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள். நான் மனதில் நம் ஜெர்ரிக்கு (உயிர்வரை) ஒரு வடிவம் தந்திருந்தேன்.. அதை அர்ஜுன் முழுவதுமாகப் பிரதிபலிக்கக் கண்டேன். வட்ட மூக்குக்கண்ணாடி, சுருளான கேசம், கடைசி கழுத்து பட்டன்வரை கர்மசிரத்தையாக பூட்டியிருக்கும் சட்டை. குணமும்கூட ஜெர்ரியைப் போலத் தான். மனதில் தோன்றுவதைப் பட்டென்று பேசும் ஆள் அவன். முதல் பார்வையிலேயே விழுந்துட்டேன் என சொல்லவும் வேண்டுமா??
அர்ஜுனின் அறை என்னைப்போன்ற காமிக் பிரியர்களின் சொர்க்கம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அர்ஜுனைப் பார்க்கவா அல்லது அவன் வைத்திருக்கும் அவென்ஜர்ஸ் அலாரம், ஸ்பைடர்மேன் வால்பேப்பர், அயர்ன்மேன் வாட்ச், ஹல்க் டீஷர்ட், கேப்டன் அமெரிக்கா போஸ்டர்ஸ், மார்வெல் லோகோ போட்ட ட்ராவல் பேக் முதலியவற்றைப் பார்க்கவா என்றுதான் தவித்தேன்!
(நானும் இதுபோல மெர்ச் பிரியைதான். சுமார் இருபது டீஷர்ட் வைத்திருக்கிறேன் மார்வெல் மட்டுமே!)
இவன்போன்ற ஆண்களை யாருமே திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என அலுவலகமே சபிக்க, அர்ஜுனுக்கோ அவன் மனதுக்குப் பிடித்தபடி ஒரு பெண் அமைகிறது. இரண்டு மாத நிச்சயதார்த்த காலத்துக்குப் பிறகு திருமண நாளும் வருகிறது.
அசம்பாவிதமாக அவனது வாயாலேயே அவன் திருமணம் நின்று போய்விட, அர்ஜுனுக்கு மன அழுத்தம் வருகிறது. வீட்டினர் எல்லோரையும் அவனது சோகம் பாதிக்கிறது; காயப்படுத்துகிறது. அதனால் ஒரு டாக்டரைப் பார்க்கச் செல்கிறான் அவன்.
நிற்க.
நியாயமாகப் பார்த்தால் அவன் பார்க்கவேண்டியது ஒரு தெரபிஸ்ட்டை. நானும்கூட திரையில் நடிகை அபிராமி வரும்போது அவர் மனநல ஆலோசகர் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த சீன்களில் அவர் பிரசவம் பார்க்கிறார், தனியாக ஹாஸ்பிடல் நடத்துகிறார், ஏன்.. கேன்சருக்கு கூட வைத்தியம் பார்க்கிறார்! இதுபோதாதென புத்தகங்கள் வேறு எழுதுகிறார். (ஏதேது... நமக்குக் காம்படிஷனா வந்துடுவாங்க போலிருக்கே!)
சரி அதை விடுங்க. நாம அர்ஜுனைப் பார்ப்போம்.
இந்த சகலகலா ஆலோசகர், அர்ஜுனின் மனசோர்வைப் போக்க சுற்றுப்பயணமாக எங்கேயாச்சும் போய்வரச் சொல்கிறார். அர்ஜுன் தனது OCDஐ காரணம் சொல்லி மறுக்கிறான்.
இந்த இடத்தில் ஒரு நல்ல தெரபிஸ்ட் இருந்திருந்தால், அவனது சூழலைப் புரிந்துகொண்டு, வேறு ஆலோசனை தந்திருப்பார்கள். ஆனால் நம் தற்காலிக தெரபிஸ்ட் என்ன செய்கிறார் தெரியுமா? Manipulation.
ஆம், அர்ஜுனின் கையில் இரண்டு முற்றுப்பெறாத கதைகளை (அவனிடம் அதை சொல்லாமல்) தந்து இரவில் தூக்கம் வரவில்லை என்றால் படிக்குமாறு 'சாதாரணமாக' சொல்லிவிட்டுச் செல்கிறார். அர்ஜுனுக்கு இருப்பது Obsessive compulsive disorder. நம்மைப்போல அவனால் முற்றுப்பெறாத கதைகளைப் படித்த்விட்டு மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. அது அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும். (நாமே எத்துணை நேரங்களில் சஸ்பென்ஸ் தாங்காமல் அடுத்த எபிசோடை கேட்டு வாட்பேட் எழுத்தாளர்களிடம் சண்டை போடுகிறோம்...)
எனவே அவ்விரு கதைகளின் முடிவைக் கேட்டு டாக்டரிடம் அவன் கெஞ்ச, அவரோ, அவை இரண்டும் கதைகள் இல்லை, நிஜ சம்பவங்கள் என்று கூறி, ஷிம்லாவுக்கும் கொல்கத்தாவுக்கும் இரண்டு முகவரிகளை எழுதி அவனிடம் நீட்டுகிறார். கதைகளின் முடிவு வேண்டுமென்றால் நீயே தேடிச்செல் என்கிறார். சாதாரண மனிதர்களுக்கு இது நல்ல தீர்வுதான். தேடல், பயணம் போன்றவை அவர்களின் மனதை தேற்றும்; மாற்றும். ஆனால் ஏற்கனவே neurodivergent ஆக இருக்கும் அர்ஜுனுக்கு ஏன் இந்த ட்ரீட்மெண்ட் என எனக்குப் புரியவில்லை.
ஆனால் அர்ஜுன் தைரியசாலி. தனது OCDஐ சமாளித்து, மனதைத் தேற்றிக்கொண்டு, எப்படியோ கொல்கத்தா கிளம்புகிறான். புயலால் விமானம் புறப்படாமல் நின்றுவிட, பேருந்தில் செல்லலாம் என புவனேஷ்வர் பேருந்து நிலையத்துக்கு வருகிறான். அங்கே தமிழ்பேசும் சுபாஷினியை சந்திக்கிறான்.
வழக்கமாக தமிழ் சினிமாக்களில், 'வழக்கமான பெண்கள் போல இவள் இல்லை' என்பதை ஒருவிதமாகக் காட்டுவார்களே.. அதுதான் சுபா. Extremely extroverted. துடுக்கான, திமிரான முதல் அறிமுகம். அதாவது, அர்ஜுனுக்கு நேரெதிரான கேரக்டர்.
அர்ஜுனுக்கு பாஷை தெரியாததால் அவளது உதவியை நாடுவான். அவளோ தனது extroverted sideஐ அவனுக்குக் காட்டுவதற்காக என்னென்னவோ செய்வாள். பேருந்தில் ஏறுவாள்; அது எங்கேயேனும் சாப்பாட்டுக்கு நின்றால் உடனே இறங்கிவிடுவாள் பெட்டியோடு. கவலையே இல்லாமல் தனியாக எங்குவேண்டுமானாலும் செல்வாள். பேருந்தைத் தவற விட்டாலும் சலனமே படமாட்டாள். பேர்தெரியாத ஊரில் சாலையில் வரும் ஏதோ ஒரு லாரியில் ஏறிக்கொண்டு, சாலையில் நிற்பவர்களுக்கு கைகாட்டுவாள் உற்சாகமாக. பஞ்சாபி தாபாக்களில் உட்கார்ந்து சீட்டாடுவாள். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அர்ஜுனைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு அவள் தன்பாட்டிலே எங்கேயேனும் போய்விடுவாள். மொத்தத்தில் நிஜ உலகத்தையே பார்த்திராத யாரோவொரு ஆணால் எழுதப்பட்ட பெண் கதாபாத்திரம்தான் சுபா.
ஆனால் இதையும் மீறி அர்ஜுன் அவள்மீது அக்கறையாக இருப்பதால் சுபாவிற்கு அர்ஜுனைப் பிடிக்கத் தொடங்கும். அவ்விரண்டு கதைகளின் முடிவைத் தேடி அர்ஜுனுடன் அவளும் செல்வாள்; ஏனென்றால், அவளுக்கு வேறு என்ன வேலை படத்தில்? ஹீரோவுடன் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட வெட்டிப் பொண்ணு தானே அவள்?
எப்படியோ கொல்கத்தாவிலும் இமாச்சலத்திலும் இரண்டு கதைகளின் நிஜ மாந்தர்களைக் கண்டு, முடிவைத் தெரிந்துகொள்வர். அதாவது, அதீத சோகத்திலும்கூட, வாழ்க்கையில் நம்பிக்கையை விடாமல், அதை நிறைவாக வாழவேண்டும் என்னும் நீதியை தெரிந்துகொள்வர்.
அர்ஜுனின் மனதில் மாற்றம் நிகழும். அதிசயம் என்னவென்றால் இதுவரை உலக மருத்துவர்கள் யாராலும் குணமாக்க முடியாத OCD, அர்ஜுனுக்கோ அசால்டாக குணமாகிவிடும். அவனது Germophobia மாயமாகி மறைந்துவிடும். அவனது கூச்ச சுபாவம்கூட அப்படியே கலகலவென மாறிவிடும். அதாவது என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், மனோவியாதிகள் எல்லாம் வெறும் மனப்பிராந்தி, ஒரு டூர் போனால் அதெல்லாம் தானாக சரியாகிவிடும். அப்படித்தானே? இது தெரியாம நாங்க சைக்கியாட்ரி எல்லாம் படிக்கிறோமேப்பா!?
இது எல்லாத்தையும் விட என்னை பர்ஸனலா பாதித்த விஷயம் என்ன தெரியுமா?
சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கண்ணாடி அணிந்திருக்கும் அர்ஜுன், தனது மனமாற்றத்துக்குப் பிறகு திடீரென அந்தக் கண்ணாடியைக் கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, தலையை ஸ்டைலாகக் கோதிவிட்டு வெளியே செல்வார். அதைப் பார்க்கும் சுபா, "ஹேய்.. ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க.. இந்த ஸ்டைல் உனக்கு நல்லா இருக்கு!" என்பாள். இல்ல எனக்குப் புரியல, கண்ணாடி போட்டிருந்தா அது அசடு; கண்ணாடியைக் கழட்டுனா ஸ்மார்ட்டா? பார்வைக் குறைபாட்டை நீக்க அணியும் மூக்குக் கண்ணாடிக்கும், ஒருவரது பர்சனாலிட்டிக்கும் என்னங்க சம்மந்தம்?
எந்த கேப்பில் அர்ஜுனுக்கு சுபாமீது காதல் வந்ததென்றே தெரியவில்லை, ஆனால் க்ளைமேக்ஸில் கர்மசிரத்தையாக தனது காதலை சொல்லிவிடுவார் ஹீரோ. எனது ரியாக்ஷன்: 'ஏய் எப்புறா?'
என்ன மது, உன் ஆள் படம்னு சொல்லிட்டு இப்டி கழுவி ஊத்துற என்கிறீர்களா? படம் முழுக்க அசோக் செல்வன் ரசிக்கும்படியாகத் தான் இருக்கிறார். அர்ஜுனாக வரும்போதும் சரி, கதைக்குள் கதையாக, மற்ற இரண்டு கதாபாத்திரங்களாக வரும்போதும் சரி... நடிப்பில் நூத்துக்கு நூறு. டயலாக் டெலிவரி ஃபர்ஸ்ட் க்ளாஸ்!
வீராவாக அவர் வரும் போர்ஷன் சிறிதென்றாலும், என்னை சிலிர்த்து சீட்டியடிக்க வைத்துவிட்டார். அப்படியே எனக்கு சக்தியின் ஞாபகம்! (வண்ணங்கள்) அதே மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்.. அதே புல்லட்டு, அதே கருப்புக் கண்ணாடி, ஜீன்ஸ் பேண்ட், டார்க் கலர் சட்டைகள், கையில் காப்பு, அதே முரட்டு குணம். காவ்யா எவ்வளவு சுலபமாக வீழ்ந்தாலோ அதேபோல நானும் ஃப்ளாட்! ச்சே என்னா லுக்கு தெரியுமா? அசோக் செல்வனின் பெஸ்ட் லுக்ஸில் இதுதான் முதலிடம்!! மீனாவைப் போலவே எனக்கும் அவரது தாடி மீது மையல்! ஷேவிங் க்ரீமை தடவும்போது எனக்கும்கூட மினி ஹார்ட் அட்டாக்!
ஆனால் அடுத்த சீனே பிரபாவாக வந்தாரே, மழித்த தாடையுடன்... அப்பப்பா!!! டபுள் ஃப்ளாட்!!! அதிலும் அந்த கோயமுத்தூர் பாஷை... அச்சோ... எனக்குள் இருக்கும் கொங்கு நெஞ்சம் பொங்கியது பாசத்தில்! அவருக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி! அவரது இன்னொசெண்ட்டான பேச்சுக்கும், க்யூட் க்யூட்டாக அவர்கொடுத்த எக்ஸ்ப்ரெஷன்களும் வேற லெவல். சரி, சாக்லேட் பாயாக தான் இருப்பார் என நினைத்தபோது காளி வெங்கட் வந்து வேறு கதை சொல்ல, சீனில் இப்போது க்யூட் பிரபா இல்லை, டி.சி.பி பிரபாகரன் ஐபிஎஸ்!
பிரபாகரன்-மதவதனி கதை கண்டிப்பாக வாட்பேடின் ஏதோவொரு பக்கத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது என நான் துண்டைப் போட்டுத் தாண்டுவேன்!
கம்பீரமான காவல் அதிகாரி... அழகான கிராமத்துக் கிளியைப் பார்த்த நொடியிலேயே காதலில் விழுகிறார். சுற்றிவளைக்காமல் அவளது தந்தையிடம் நேரே போய்ப் பேசுகிறார். தந்தையோ தன் மகளுக்கு லவ் மேரேஜில் தான் ஆர்வம் எனக் கைவிரித்துவிட, அவரைக்கொண்டே படுசுட்டியாக ஒரு ட்ராமா போட்டு, முதல்முறை எதேச்சையாக சந்திப்பதுபோல மதியை சந்தித்து, அரைமணிநேர கார் பயணத்தில் அவளை இம்ப்ரெஸ் பண்ணி, பெரியவர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணுகிறார். படிக்கும்போதே புல்லரிக்கிறது அல்லவா? படம்பார்த்தால் என்ன ஆவீர்கள்?
மொத்தத்தில் அசோக் செல்வன் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஒவ்வொரு முறையும் மிக சிறப்பாக செய்கிறார். அதுபோதுமே அவரது விசிறிக்கு!
படம் நல்ல படம்தான். நல்ல மனதோடு, மக்களுக்கு பாசிட்டிவிட்டி பற்றிக் கருத்து சொல்ல எடுக்கப்பட்ட படம்தான். ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக ரிசர்ச் பண்ணியிருக்கலாம். ரிது வர்மாவின் 'சுபா' இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம். மனநலம் பற்றி பாடமாக அதிகம் படித்ததால் எனக்கு மேற்சொன்ன நெருடல்கள் ஏற்பட்டிருக்கலாம். உங்களுக்கு அது ஏற்படலாம்; ஏற்படாமலும் போகலாம். சாதாராண neurotypical ஆளாக அர்ஜுன் இருந்திருந்தால், இது ஒரு தரமான ட்ராவல் ஜர்னி படம்.
அனைவரும் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய படம். அட்லீஸ்ட் அசோக் செல்வனுக்காகவேனும்! ;)
***
நீங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன தோணுச்சு? இங்கே சொல்லலாமே!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro