Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

இடைவெளி

அக்டோபர் வந்தாச்சு!

கடந்த இரண்டு மாசமா ஹாஸ்டல் ரூம்ல விலங்கில்லா கைதியா அடைப்பட்டு, வெளியுலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம, பைத்தியம் மாதிரி மெடிக்கல் புக்ஸை உருப்போட்டு, ராப்பகல் எல்லாம் மறந்து, நடுநிசியில முழிக்கறதும், அதிகாலையில படுக்கறதுமா உடம்பை வரைமுறை இல்லாம வருத்தி எடுத்து, ஒருவழியா ஏழு எழுத்துத் தேர்வு, நாலு செய்முறைத் தேர்வு, பதினாறு நேர்முகத் தேர்வு, அதாங்க வைவா-வோசி, எல்லாம் முடிச்சிட்டு நிமிர்ந்து பாத்தா,  உலகம் எங்களுக்காக நிக்காம, வேகமாக ஓடியிருந்தது.

கடைசியா நிம்மதியாத் தூங்கி எழுந்த நாள், ஆகஸ்ட் பதினாலு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள்ல, மருத்துவ மாணவர்கள் சுதந்திரம் நிரந்தரமா பறிபோனது. தேர்வு நேரங்கள் தவிர பிற நேரங்களில் மருத்துவம் கல்கண்டாய் இனிக்கும். தேர்வு வந்துவிட்டால் மட்டும் ஏன்டா இதை எடுத்தோமென மனது புலம்பத் தொடங்கிவிடும்! படிக்கவும் சண்டித்தனம் செய்யும், படிக்காமலிருந்தாலும் பயந்து சாகும். மானங்கெட்ட மனது. ஒன்றரை மாதமாய் படுத்தி எடுத்துவிட்டது!

தேர்வெல்லாம் முடிச்சிட்டதும் மொதல்ல நான் செஞ்ச காரியம் என்ன தெரியுமா? ஒரு கோன் ஐஸ் வாங்கி ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுட்டு, அதே சந்தோஷத்தோட கட்டில்ல மல்லாந்து விழுந்து பத்து மணிநேரம் தூங்கி எழுந்தேன்.

இப்ப திங்கட்கிழமைல இருந்து மூன்றாம் வருட மருத்துவ வகுப்புகள். இரண்டாம் வருஷம் வாங்கின அடியில இருந்து கண்ணு முழிக்கும் முன்ன மூணாவது வருசத்தை ஆரம்பிக்கறாங்க! அநியாயம்பா!

இன்னொரு அநியாயம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் ஒன்றுமே செய்யாத எங்களைப்போன்ற உதவாக்கரைகளை, மூன்றே வாரங்களில் படித்துத் தேர்வெழுதி, அதிலும் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்! அதிலும் நேர்முகத் தேர்வெல்லாம்... ஏழாம் நரகம்தான்! இன்டர்னல், எக்ஸ்டர்னல் என்று தினம்தினம் நான்கு பேரை சமாளிக்க வேண்டும். இரண்டாயிரம் பக்கங்கள் இருக்கும் ராபின்ஸ் புத்தகத்திலிருந்து, அவர்கள் கேட்கும் அந்த ஒற்றைக் கேள்விக்கான விடையை மனதுக்குள்ளாறே இரண்டு நானோ செகண்ட்களில் சலித்து எடுத்து நீட்டுவது எல்லாம் இமாலய சாதனை, ஆனால் அவர்கள் மட்டும் ஒத்துக்கொள்வதே இல்லை அதை!

நான் எழுதிய தேர்வுகளிலேயே, சட்ட மருத்துவம் என்னும் ஃபாரன்சிக் சயன்ஸ் தேர்வுதான் அட்டகாசமாக இருந்தது! எல்லாப் புகழும் ஜெர்ரிக்கே!🤣

மருந்தியல் எனப்படும் ஃபார்மா சயின்ஸ் செம்ம சொதப்பல். பார்ப்போம். நோய்க்குறியியல், நுண்ணுயிரியல் எல்லாமும் சுமார் தான். ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகத்தான் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அவர்கள் பேசுவது எனக்குப் புரியாமல், நான் பேசுவது அவர்களுக்குப் புரியாமல்.. ஒரே உளறல்தான்! அதிலும் ஒருமுறை வைஃபை கனெக்சன் கட்டாகி விட, எங்கள் பாடு திண்டாட்டம்தான்!

சரி, ஏன் இந்தப் புலம்பல் அத்தியாயம்? அதுதான் தேர்வுகள் முடிந்துவிட்டதே?

ஆம், சரிதான்! இனி புலம்பல்கள் கிடையாது!

'உயிர் வரை தேடிச்சென்று' கதையை இன்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். நாளை முதல் அத்தியாயங்கள் வந்துவிடும். என்னதான் தினமும் மருத்துவமனையில் நாள்தோறும் நின்று மூன்றாம் வருடப் பாடங்களை மண்டையில் ஏற்ற தினம் தினம் பாடுபட்டாலும், அரைமணி நேரமேனும் வாட்பேடில் எதையாவது கிறுக்கிடாவிட்டால், பைத்தியம் பிடித்துவிடும் நிஜமாகவே!

அத்தோடு, 'காதல் கொள்ள வாராயோ' என்ற புது கதையும் இன்றுமுதல் ஆரம்பம்.

முழுக்க முழுக்கக் காதல் மட்டுமே! கிளைக்கதை, துணைக்கதை, மர்மம், எதுவும் கிடையாது. ஒரு ஆண் - ஒரு பெண். இருவரின் உணர்வுகள், புரிதல்கள், கனவுகள். சில க்யூட், ஸ்வீட் நொடிகள், தழும்பும் பூரிப்பு, தவழும் புன்சிரிப்பு. அக்கதை உருவான விதமே கொஞ்சம் வினோதம்தான். தேர்வுகளுக்கு முட்டி முட்டிப் படித்துக்கொண்டிருந்த நேரங்களில், சில நேரம் அப்படியே கண்கள் புத்தகத்தைப் பார்த்தாலும் மனது எங்கேயோ மிதந்து சென்றுவிடுமல்லவா? அப்போது அது சென்ற இடம்தான் அக்கதை. திடீரென அழகாக சில வார்த்தைப் பரிமாற்றங்கள், சில க்யூட் காட்சிகள் கண்ணில் ஓடத்தொடங்க, அப்படியே அதைப் புத்தகத்தின் பின்பக்கத்தில் கிறுக்கத் தொடங்கினேன் நானும்! இப்போது எடுத்துப் பார்த்தால், பாதி புரியவில்லை! ஹிஹி. முடிந்தவரை அவற்றை அப்படியே எழுதப் பார்க்கிறேன்.

இந்த முறையேனும் மூன்றாமாண்டிற்கு முதலிலிருந்தே படிக்கத் தொடங்க வேண்டும்.
பார்ப்போம். மங்களகரமாக மண்டே ஆரம்பிப்போம்🤣. இவ்வளவுதான் என் வாழ்வில் புதிதாய். உங்களுக்கு?

பேசத் தோன்றினால் எப்போதும் என் (வெர்ச்சுவல்) கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும். தொலைதொடர்பை முடிந்தவரை பயன்படுத்துவோம், மனிதர்களை சேமிக்க.

அனைவருக்கும் எனது அன்பு!

மது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro