அன்புடன்
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. அதை இந்த வருடம் நாமெல்லோரும் கண்கூடாகப் பாத்திருப்போம். கண்மூடித் திறக்கறதுக்குள்ள, 2020 முடிஞ்சு போச்சு. இப்ப தான் புது வருடப் பிறப்பு கொண்டாடிட்டு இருந்த மாதிரி இருக்கு, அடுத்த வருஷமே வரப்போகுது. இப்படி நில்லாமல் ஓடும் காலம், நிலையாக நம்மை நினைவிற்கொள்ள வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் நாம்?
காலத்தால் அழியாத கலைகளைப் படைக்க வேண்டுமா? தேவையில்லை. யாருமே மகாபலிபுரத்துக்குச் சென்று, இரண்டாம் மகேந்திர பல்லவன் கட்டிய கற்கோவில் இது எனத் தொடங்கும் மொக்கையான டூரிஸ்ட் கைடின் விளக்கத்தைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை இந்நாளில். சென்றோமா, இரண்டு மூன்று நல்ல புகைப்படங்களை எடுத்தோமா, கடற்காற்று வாங்கினோமா, கடலை வாங்கி சாப்பிட்டோமா... இதுதான், இவ்வளவுதான். மகாபலிபுரம் வந்த பயனை அடைந்துவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொள்வர் நம்மவர்கள்.
தலைவனாக இருந்து மக்கள் மனதில் தம்மை நிலைநாட்டவேண்டுமா? தேவையே இல்லை! ஐந்து வருட ஆட்சிக்காலம் முடிந்துவிட்டால், சொந்த வீட்டின் நாய் கூட அவர்களை மதிக்காதாம். பதவியிலிருப்போர் அனைவருமே, அந்தப் பதவியை நிம்மதியாக அனுபவிக்க முடியாததற்கு ஒரே காரணம், பதவி இல்லாமல் போகையில் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயத்தால்தான். As Ang Sang Sui Ki said, "It is not the power that corrupts people, it is the fear of losing it."
சரி, வேறு என்ன செய்யவேண்டும் இந்த நிலையாத உலகில் நிலைபெற?
நிஜமா, ரொம்ப சுலபம். அன்பு. ஆமா... அன்பை வழங்கும் அழகிய நெஞ்சங்களை, காலம் ஒருநாளும் மறப்பதில்லை. மக்கள் மறந்துவிடலாம், மரியாதை குறைந்துவிடலாம், ஏன், நாமே கூட நாம்செய்த அன்பான செயல்களை தூசாக நினைத்து மறந்துவிடலாம். ஆனால், காலம் அதை மறப்பதில்லை. இன்று விதைத்தால் நாளை முளைக்கும் என்பது, உலகறிந்த உண்மையில் ஒன்று. அன்புக்கும் அதுவே விதி.
இந்தப் பிரம்மாண்டப் பேரண்டப் பெருவெளியில், ஒரு புள்ளியிலும் குறைவான மதிப்பைப் பெற்றவர்கள் நாம், மனிதர்கள். இந்தப் பூமி உருவாகிய காலத்தை ஒரு நாளின் அளவாகக் கொண்டால், அதாவது, இருபத்தி நான்கு மணி நேரங்களில் இந்த பூமியின் தோற்ற இயக்கங்களை அடுக்கினால், பூமி ஒரு காஸ்மிக் குழம்பாக ஜனித்தது நள்ளிரவு 12 மணிக்கு என்றால், டைனோசர்கள் தோன்றயது மதியம் 1 மணியளவில். நாளின் கடைசி நிமிடமான, 11.59இன் போதுதான் மனித இனமே தோன்றுகிறதாம்.
மீப்பேருயிரியாக இந்த பூமி இருந்தால், நமது உடலில் ஒட்டும் பாக்டீரியா போன்ற நுணுக்கமே நாம் இந்தப் பூமிக்கு. இந்தச் சிறிய வாழ்நாளில், வெறுப்பும் கோபமும் கொண்டு நாம் சாதிக்கப் போவது என்ன? நேற்று நாம் சாலையில் பார்த்துக் கோபப்பட்ட நபர் இன்று இல்லாமல் கூடப் போயிருக்கலாம். நீங்கள் இத்துணை வருடங்கள் பகைப் பாராட்டி, ஒருநாள் மன்னிப்புக் கேட்க நினைக்கும்போது இந்த நபர் இல்லாமல் ஆகியிருக்கலாம்.
'நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை உடைத்திவ் வுலகு' என்கிறது வள்ளுவம். நேற்று நன்றாக இருந்த ஒருவன், இன்று திடீரென இல்லாமல் ஆகிவிடும் இந்த நிலையாமை தான் உலகின் பெருமையே என்கிறார் அவர்.
யோசித்துப் பார்த்தால், எத்தனை குறுகியது இந்த மனித வாழ்வு!? ஒரு இருபது படிப்பில் மறைய, மறு இருபது காதல், கல்யாணம் என்று கரைய, இன்னுமொரு இருபது ஆபிஸ், வேலை என்று தொலைய, நிமிர்ந்து பார்த்தால் அறுபதுக்கு வந்துவிடுகிறோம். வாழ்க்கை முழுவதும் எதற்காக ஓடுகிறோமெனவே தெரியாமல் ஓடிவிட்டு, இப்படி ஒருநாள் நின்று திரும்பிப் பார்த்தால், நமக்குத் தெரியப்போவது என்ன?
வருத்தங்கள், அதாவது regrets. இதை இப்படி செய்திருக்கலாமோ, அதை அப்படி செய்திருக்கலாமோ என்ற வருத்தம்.
'நான் பேசாம ஆர்ட்ஸ் எடுத்திருக்கலாமோ?' 'நான் அன்னைக்கே அந்த ஷேர்ல பணம் போட்டிருக்கலாமோ?' 'நான் என் பையன்கூட இன்னும் கொஞ்ச தருணங்கள் செலவிட்டிருக்கலாமோ?' 'நான் சரியா யோசிச்சிட்டு இந்த கல்யாணத்தை செஞ்சிருக்கலாமோ?' 'நான் என் ஸ்டூடண்ட்டை அன்னைக்கு அப்படித் திட்டாம இருந்திருக்கலாமோ?'
இப்படியெல்லாம் யோசிக்க வைக்கும் வருத்தங்கள்.
வருந்தி ஒன்றுமே ஆகப்போவதில்லை. சிந்திய பாலுக்காக அழுவது, காலத்துக்கு நாம் செய்யும் அவமரியாதை. ஆனால், பாலை சிந்தாமல் வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கும்போது, அதை ஏன் செய்யக் கூடாது? சிறியதாக இருந்தாலும், நம் கட்டுப்பாட்டில் தானே நமது வாழ்க்கை இருக்கிறது? நம்மால் அதை வசந்தமாக மாற்றிக்கொள்ள முடியாதா?
நிச்சயமாக முடியும். அன்பைப் பகிர்வதால். அன்பை வெளிப்படுத்துவதால். இங்கே அன்பு என்பது எதிர்பாலினத்தவர் மீது கொள்ளும் பிரேமை மட்டுமில்லை. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிர்மீதும் நாம் வைக்கும் ஜீவகாருண்யம். கருணை. மதிப்பு.
முதலில் சக மனிதர்களிடமிருந்து துவங்குவோம். புன்னகைகள் நிறையச் செய்வோம். சொல்வதுபோல், "காசா, பணமா? ஜஸ்ட் ஸ்மைல்!". கனிவான வார்த்தைகளைப் பேசுவோம். இதமளிக்கும் சொற்கள், உங்களுக்கு இதயத்தில் இடமளிக்கும் சொற்கள். வழிந்துபேசச் சொல்லவில்லை, உங்கள் சொற்களில் நன்னெஞ்சு மட்டும் இருப்பதை உறுதிசெய்து பேசச் சொல்கிறேன். உதவுவோம். நம்மால் இயன்றவரை. நமக்கு முடிந்தவரை.
எங்கள் திருப்பூரில், 2004ல், அரசு மாற்றத்தால் ஏற்றுமதி எல்லாம் குறைந்துபோய், ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் பல திடீரென மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் ஓரிரவில் வருமானம் அற்றுப்போய் நடுத்தெருவில் நின்றனர். மக்கள் பசியைப் போக்க, அங்குமிங்கும் கஞ்சித் தொட்டிகள் திறந்து பசியாற்றிக்கொண்டிருந்தனர் சில நல்ல உள்ளங்கள். மாணவர் கூட்டங்கள் இதற்காகத் தெருவில் இறங்கி, நன்கொடைகள் கேட்டு பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் கையேந்தி நின்றனர். பார்த்தும் பாராமல் கடந்துபோன பயணிகளின் மத்தியில், அழுக்கு சட்டையோடு வந்த பிச்சைக்காரர் ஒருத்தர், அந்நாளில் பிச்சையெடுத்த மொத்தக் காசையும், எண்ணிக்கூடப் பார்க்காமல் மாணவர்களின் உண்டியலில் போட்டுவிட்டுச் சென்றாராம்.
2015ல் சென்னையில், கடலூரில் வெள்ளம் வந்தபோது, பணக்கார விடுதிகள் எல்லாம் உணவின் விலையை ஏற்றிவைத்து விற்றபோது, இட்லி சுடும் பாட்டி ஒருவர், இலவசமாக அவரே சென்று பசித்தவருக்கு உணவளித்தார்.
இவைகள் நமக்குச் சொல்லும் பாடம்: உதவுவதற்குப் பணம் தேவையில்லை. மனம் மட்டும் போதும்.
மனது வைப்போம், அன்பைப் பரப்புவோம், பூமியை வசந்தமாக்குவோம்.
அன்புசெய்வதற்கு விழாக்காலத்தைப் போன்ற சிறந்த நேரம் வருமா?
தீப ஒளித் திருநாள். இன்று நம் வீடு மட்டுமல்லாது, இன்னும் சில வீடுகளும் பிரகாசமடையச் செய்தீர்களானால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பட்டாசு, பட்டாடை, பலகாரம் என்று சம்பிரதாயமாக தீபாவளிக் கொண்டாட்டம் நடந்திருக்கும். வீட்டில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததா?
எங்கள் வீட்டில் இம்முறை காலையிலேயே சண்டை, தகராறு. அதன்பின் சரியாகிவிட்டாலும், அந்த நாளின் மேன்மையை அந்தக் காலை குறைத்துவிட்டதுபோல் தோன்றியது. அன்பின் முக்கியத்துவம் விளங்கியது. அனைத்தையும் எப்போதும் சரியாகவே செய்யப் படைக்கப்படவில்லை நாம். தவறுகள் செய்துதான் கற்றுக்கொள்வோம். தவறுகள் மனித இயல்பு. அதை அன்பால் மாற்றுவதுதான் எளியது. கோபம், சுடுசொல், பாராமுகம் இதெல்லாம், தவறுகளின் தாக்கத்தை அதிகரிக்குமே தவிர, அதை மாற்றாது. தினந்தோறும் சந்திக்கும், எப்போதும் பார்க்கும், என்றும் உங்களுடனே இருக்கும் நபர் என்பதற்காக, அவரிடம் அன்பு வார்த்தைகள் கூறாமலிருப்பது சரியன்று. Take it for granted என ஆங்கிலத்தில் சொல்வதுபோல், அவர்களது நெருக்கத்தை அசட்டையாக எடுத்துக்கொண்டால், அங்கே அன்பு இல்லாமல் போனால், அந்த உறவின் ஆழம் குறையும், விரிசல் வரும்.
பார்க்கும் நேரங்களில் சிறு சிரிப்போ, நல்ல வார்த்தைகளோ, அந்த உறவை மேம்படுத்தும், அன்பை அதிகரிக்கும்.
வாழ்ப்போற கொஞ்ச நாள்ல, அன்பை மட்டும் நிறையத் தந்து செல்வோம்!
மது.
*********************
தீபாவளி சிறப்புச் செய்திகள்:😅
வாட்பேட் தூதரகப் பயிற்சியில, அதாங்க wattpad ambassador training, அடியேனுக்கு இடம் கிடைச்சாச்சு. நேத்து மதியத்துல இருந்து டிஸ்கஷன் ஆரம்பிச்சுது. நிறையப் புது மனிதர்களை சந்திச்சேன், சந்திச்சிட்டு இருக்கேன். எல்லாரும் அமெரிக்கர்கள் கிடையாது, வேற வேற நாடுகள்ல இருந்து வந்திருக்காங்க எல்லாரும். பேசறதுக்கே ரொம்ப ஆர்வமா இருக்கு!! யாருமே அந்த தலைகனத்தோட எல்லாம் இல்லாம, ஏதோ பலநாள் பரிச்சயமான ஆளுங்க மாதிரி, உடனடியா மிங்கிள் ஆகிட்டாங்க. நிறைய புது நண்பர்களும், நிறைய இசை சிபாரிசுகளும் கிடைச்சது. காலைல இருந்து அவங்க சொன்ன பாடல்களைத் தான் கேட்டுட்டு இருக்கேன்😍🤩😁
அப்பறம், தீபாவளியை முன்னிட்டு, மைனாவோட பாட்கேஸ்ட்ல, ஒரு ஸ்பெஷல் எபிசோட் பண்ணியிருக்கோம். இன்னும் சில நாட்களில் வெளியிடுவாங்கனு நினைக்கறேன். But it was fun to do. Very relieving, indeed!!
கதையை இன்னும் தொடலை😅 நாளைக்கு எப்படியும் எழுதப் பாக்கறேன்!!
Belated Happy diwali!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro