20
ஈஷ்வரபாண்டியனை பின்தொடருமாறு தன் மனம் சொன்னதை உடனே செயல்படுத்த துவங்கினான் விஷ்ணு . ஜீவாவிடம் ஒரு வார்த்தை கூறிவிட்டு செல்லலாம் என மனம் நினைத்தாலும் அவனை எந்த வம்பிலும் சிக்க வைக்க விஷ்ணுவின் மூளை இடம் தரவில்லை. ஆகவே விஷ்ணு மட்டுமே ஈஷ்வரபாண்டியன் கவனியாவண்ணம் அவரைப்பின் தொடர்ந்தான். அவரின் வாகனம் புறப்பட்டவுடன் ஷெட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராமின் இருசக்கரவாகனத்தில் செல்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினான் .
ஈஷ்வரபாண்டியனின் கார் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தது . அவ்வளவாக ஆள்நடமாட்டமும் வாகனங்களும் இல்லாவிடினும் ஓரளவிற்க்கு போக்குவரத்து நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது .
அடுத்த இருபது நிமிட நேர பிராயாணத்தில் அவரது வாகனம் முக்கியபாட்டையிலிருந்து சற்று விலகி ஜனசஞ்சாரமற்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது . இந்த பகுதியில் மிகவும் நெருக்கத்தில் அவரைப்பின்தொடர்ந்தால் அவர் தன்னைக் கண்டுபிடித்துவிடக்கூடும் என அவதானித்தவன் சற்று கணிசமான இடைவெளியிலேயே அவரைக் கண்காணித்துக்கொண்டு வந்தான் . சிந்தை முழுக்கவும் எண்ண அலைகள் ஆர்ப்பரிக்க தன் பணியை தொடர்ந்தான் விஷ்ணு .
சிறிது நேரத்தில் ஈஷ்வரபாண்டியனது வாகனம் ஒரு ஒதுக்குபுறப் பகுதியில் தன் பிரயாணத்தை நிறுத்தியது . அதிலிருந்து இறங்கிய ஈஷ்வரபாண்டியன் சுற்றும் முற்றும் தன் பார்வையை செலுத்திவிட்டு பின் கிழக்குத்திசையை நோக்கி நடக்கலானார் . சற்றுதூரம் சென்றதும் கானகப்பிரதேசம் தென்பட்டது . சற்றும் யோசிக்காமல் அதனுள் தன்னைப்புகுத்திக்கொண்டு மேலும் தன்பிராயணத்தைத் தொடர்ந்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் ஒரு நடுத்தரவர்க்கமான சற்றே சிதிலமடைந்த கட்டடம் தென்பட்டது . அந்த கட்டிடத்தை நெருங்கிய ஈஷ்வரபாண்டியன் உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்த கதவினருகில் சென்றவர் கதவினை லேசாகத்தட்டினார் .
அவரையே பின்தொடர்ந்து சென்ற விஷ்ணுவிற்கு அவரின் செய்கைகள் யாவும் தான் ஏற்கனவே கொண்ட சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தன .
அடுத்த சில நொடிகளிலேயே கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவரையே பின்பற்றி வந்த விஷ்ணு தன் பார்வையினை கூர்மையாக்கினான் . ஏற்கனவே சில பல அதிர்ச்சிகளை எதிர்கொண்ட விஷ்ணுவிற்கு மேலும் அதிர்ச்சி அந்த கதவினைத் திறந்தவனின் மூலம் ஏற்பட்டது .
அன்றொருநாள் பூங்காவில் தான் பார்த்த வளவனின் உருவத்தையொத்த அதே இளைஞன்தான் கதவைத் திறந்தவன் . அவனைப் பார்த்த அடுத்த நிமிடமே " வாட் த ஹெல் ஹாப்பனிங் ஹியர் ... இவன் யாரு... ராமோட அப்பாவுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் .... முதல்ல எதுக்கு இந்த இரகசிய இடம்... இந்த நேரத்துல இங்க எதுக்கு இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணணும் ... சம்திங் ராங்.... இது வெறும் சாதாரண நிகழ்வா எனக்கு தெரியல வீல்ஸ் வித்தின் வீல்ஸ் .... ஹோ ஷட்டப் விஷ்ணு ... ஸ்டாப் திங்கிங் ஓவர்மச்... அங்க கவனி ரெண்டு பேரும் கதவைச் சாத்திக்கிறாங்க ... இப்ப உள்ள போக வழி இல்ல ... வேற என்ன பண்ணலாம் யோசி ... யோசி.... " என தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தான் .
கதவினைத் திறந்தவன் ஈஷ்வரபாண்ணியனைப் பார்த்தவுடன் சற்றும் தாமதியாமல் அவரை உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
அடுத்த நொடியே தான் செய்ய வேண்டியது என்ன என முடிவெடுத்த விஷ்ணு ஒரு நொடியைக் கூட வீணடிக்காமல் அச்சிதிலமடைந்த கட்டடத்திற்குள் நுழைவதற்கு வேறேதும் வழிகள் உள்ளனவா என ஆராயத் துவங்கினான் . அக்கட்டிடத்தின் பக்கவாட்டுச் சுவரின் பக்கம்வந்தவன் அப்பொழுதுதான் அருகில் இருந்த நெடித்துயர்ந்து வளர்ந்த மரத்தினைக் கண்ணுற்றான். அதன் கிளை அதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டடத்தின் மாடியில் உள்ள அறைக்கும் அதன் சுவற்றுக்கும் நடுவே இருந்த இடைவெளியில் சென்று முடிந்தது . சற்றும் தாமதியாமல் அந்த மரத்தினில் ஏறியவன் அந்த கிளையின் வாயிலாக அக்கட்டடத்தின் மாடி முகப்பில் குதித்தான். அம்முகப்பில் மாடி அறையின் பின்பக்க மரக்கதவு காட்சியளித்தது. அந்தக் கதவை உந்தித்தள்ள எத்தனித்தான் விஷ்ணு . பழங்காலத்திய கதவாகையால் விஷ்ணுவின் பலத்திற்க்கு ஓரளவு முட்டுக்கொடுத்துவிட்டு பிறகு அவனின் முயற்சிக்கு சில நொடிகள் கழித்து செவி சாய்த்து திறந்தது அக்கதவு .
அவ்வறை பல ஆண்டுகளாக திறவாமல் இருந்திருக்கும்போலும் ஒரே சிலந்திவலைகளும் தூசுகளும் அறையை ஆக்கிரமித்துக் காணப்பட்டன. ஏதோ ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் சுற்றுலாவிற்கு வந்தால் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் போலும். ஆங்காங்கே சிதிலமடைந்து கிழிந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களின் உருவச் சித்திரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன."இப்படிப்பட்ட ஒரு பில்டிங் இங்க இருக்குன்னு கவர்மென்ட்க்கு தெரியாதா? எப்படி இவ்வளவு நாள் இதை விட்டு வச்சிருக்காங்க… " என்று அந்த நிலையிலும் யோசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு.
இவ்வாறு யோசித்துக்கொண்டே முன்னேறியவன் அவ்வறையின் சாளரத்திரத்திலிருந்து அக்கட்டடத்தின் உள்ளமைப்பை கிரகிக்க ஆரம்பித்தான். அச்சாளரத்தின் வழியாக பார்க்கும்போது கீழே சற்றே பெரிய விசாலமான கூடத்தில் நின்றபடி ராமின் தந்தையும் வளவனின் உருவத்தில் இருந்தவனும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது போல் தெரிந்தது . அங்கிருந்து கவனித்ததில் பேச்சுச்சத்தம் ஏதும் கேட்கவில்லை ஏதோ ஊமைப்படம் பார்ப்பது போல்தான் தெரிந்தது .
அவர்கள் அப்படி என்ன விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என அறிய முற்பட்டவன் மெல்ல பூனை நடையிட்டு அந்த அறையினின்றும் வெளிப்பட்டு அவர்கள் கவனியா வண்ணம் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்புத் திரை போன்று இருந்த பகுதியின் பின்னே மறைந்துக் கொண்டான் .
அங்கிருந்து பார்க்கையில் அவர்களின் சம்பாஷனை தெளிவாகவே கேட்டது .
" வருண்... பார்ட்டி வராங்கன்னு சொன்ன யாரையும் காணலை ... எப்ப வராங்க அவங்க? இந்நேரம் அவங்க வந்துருக்கனுமே? " என்று வினவினார் ஈஷ்வரபாண்டியன் .
" இல்ல அங்கிள் ...அவங்க இன்னைக்கு வரமாட்டங்க அங்கிள் ... நாளைக்கு நைட் தான் வருவாங்க " என்றான் வருண் என அழைக்கப்பட்ட வளவனின் உருவில் இருந்தவன் .
" அப்ப எதுக்கு என்ன அவசரமா பார்ட்டி வராங்கன்னு சொல்லி இப்ப இந்த அர்த்த ராத்திரி நேரத்துல வரச் சொன்ன ... முட்டாள்… " கோபத்துடன் வந்தது ஈஷ்வரபாண்டியனின் குரல்.
" உங்களை கொலை பண்ண அங்கிள் " எனச் சாதாரணமாகக் கூறிக்கொண்டே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புன்னகைத்தான் வருண் .
அவனுடைய பதிலிற்கும் செயலிற்கும் ஸ்தம்பிதமான ஈஷ்வரபாண்டியன் சற்று சுதாரித்துக் கொண்டு"வருண் … என்ன உளறிக்கிட்டு இருக்க… பைத்தியமா உனக்கு … என்கிட்ட விளையாடத வருண்" மறுபடியும் உஷ்ணக் குரல் ஈஷ்வரபாண்டியனிடமிருந்து.
"இந்த ராத்திரி நேரத்துல உங்க கூட விளையாடுற அளவுக்கு நான் பைத்தியம் இல்ல அங்கிள்" அவனிடமும் ஆவேசப் பேச்சு.
"டேய்… நீ கொலை செய்யத் துணியற அளவுக்கு நான் என்னடா தப்பு பண்ணேன்"
" என்ன தப்பு பண்ணீங்களாவா .... நீங்க பண்ணது முழுக்கவே என்வரையில தப்புதான்…நடந்த எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு சொல்றேன்…. நீங்க என்ன பண்ணீங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும்" என்றவன் மேற்கொண்டு பேசினான்.
"உங்க பையனோட ஃப்ரண்டுன்னு ஒருத்தன் வந்துருக்கானே விஷ்ணு...அவனை கொஞ்ச நாள் முன்னாடி பார்க்ல தான் பர்ஸ்ட் டைம் பார்த்தேன் ... அவனை பார்த்ததும் என் மனசுல ஏதேதோ எண்ணங்கள் நினைவுகள் ... அவனைப் பார்த்த உடனே அவ்வளவு குரோதம் .... தலையை யாரோ சம்மட்டி கொண்டு அடிச்ச மாதிரி திடீர்னு ஒரு வலி . அப்பதான் எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சுது ... அந்த விஷ்ணுவுக்கும் என்னை ஞாபகம் இருக்கா? அவனுக்கும் முன்ஜென்ம நினைவுகள் திரும்பிடுச்சானு சந்தேகமா இருந்தது ... அதனாலயே அவன் மேல மோதுகிற மாதிரி போனேன் . அவனும் என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சான் ... நான் அதைக் கவனிச்சாலும் கவனிக்காதமாதிரி கேஷுவவலா சாரி கேட்டுட்டு வந்துட்டேன் . பட் அவனை நான் கண்காணிக்க தவறவில்லை.
அப்போதான் எனக்கு மரகதலிங்கம் ஞாபகத்திற்கு வந்தது . இப்ப எனக்கு விஷ்ணுவை விட அந்த மரகதலிங்கம்தான் முக்கியமாகபட்டது . இப்போ எல்லாம் இந்த மாதிரி பழைய சிலைங்களுக்கு இருக்க விலையே பல கோடிகளுக்கு போகும் . நான் இந்த சான்ஸை மிஸ் பண்ணா என்ன விட அடிமுட்டாள் இந்த உலகத்திலயே யாரும் இருக்க மாட்டாங்க ... சோ விஷ்ணு அன்ட் கோ அங்க இருந்து கிளம்பின உடனே நானும் அங்க இருந்து ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ணாம அந்த மரகத லிங்கம் இருக்குற குகைக்கு போக ஆரம்பிச்சேன் . நான் அந்த இடத்துக்கு போகும்போது நல்லா இருட்டிடுச்சு . இதுதான் சரியான நேரம்... இப்போ இந்த நேரத்துல யாரும் வரமாட்டாங்கன்னு நினைச்சு மரகதலிங்கம் இருக்குற குன்றுப்பக்கம் போக ஆரம்பிச்சேன்... இங்கதான் நீங்க பண்ண பெரிய தப்பு ஆரம்பமாச்சு .....அவன் நடந்த சம்பவங்களை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது .
அந்த நடு இரவில் யாரும் அந்த குன்றின் பக்கம் வந்துவிட மாட்டார்கள் என்ற தைரியத்திலும் அம்மரகதலிங்கத்தின் மீதிருந்த ஆசையிலும் வருண் அக்குன்றின் புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் . அவன் அக்குன்றை நோக்கி செல்வது தூரத்தில் தன் வியாபார விஷயமாக ஊருக்கு சென்று காரில் திரும்பிவந்துகொண்டிருந்த ஈஷ்வரபாண்டியனின் கண்களுக்கு புலப்பட்டது .
" என்ன நம்ம சரவணன் பையன் போல தெரியுது ... இவன் எப்ப சென்னைல இருந்து வந்தான் ...இந்த நட்டநடுராத்திரியில எங்க போய்க்கிட்டு இருக்கான்... அதுவும் இந்த குன்று பக்கமா போய்க்கிட்டு இருக்கான் ...." என்று நினைத்தவர் அவன் நடவடிக்கையை ஊன்றி கவனிக்கலானார் .
அவன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே திருட்டுத்தனமாக அப்பக்கம் சென்றுக் கொண்டிருப்பதில் ஏதோ தவறு நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தவர் தன் காரினை சற்று தூரமாகவே நிறுத்திவிட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றார்.
வருண் அந்த மரகதலிங்கம் இருந்த அக்குகையின் நிலவறையை அடைந்தான். தான் வளவனாக இருக்கும் போது வைத்த அதே மரகதலிங்கம் இப்பொழுதும் இருப்பதைப்பார்த்தவுடன் அவனுக்கு அளப்பரிய மகிழ்ச்சியாக இருந்தது ... உடனடியாக அம்மரகதலிங்கத்தை எடுக்க சென்றான் வருண்... பற்பல வருடங்கள் ஆனதால் அதை அவ்வளவு சுலபமாக அவனால் எடுக்கமுடியவில்லை.... திடீரென்று அவனுக்கு பின்புறம் ஈஷ்வரபாண்டியனின் வருண் என்ற குரல் கேட்டவுடன் அதிர்ச்சியடையலானான் .
சற்று திடுக்கிட்டு திரும்பியவன் ஈஷ்வரபாண்டியனை கண்டவுடன் ஆடித்தான் போனான் . அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை கூட அவனுக்கு எழவில்லை .
விஷ்ணுவும் அவனின் நண்பர்களும் பூங்காவிற்கு சென்ற அந்த நாளில்தான் கோவிலில் கண்டெடுத்த ஓலைச்சுவடியில் உள்ள கோவிலின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் ஈஷ்வரபாண்டியனுக்கு தெரியவந்திருந்தது. அதில் மரகதலிங்கம் பற்றிய விவரங்களும் அடங்கியிருந்தது என்ற குறிப்பு அப்பொழுதுதான் அவருக்கு சிந்தையில் தோன்றியது.
அந்த மரகதப் பச்சை நிறத்தில் உள்ள லிங்கத்தைப் பார்த்த உடனே ஈஷ்வரபாண்டியனுக்கு ஓரளவிற்கு உண்மை விளங்கியது.
அவனையும் மரகதலிங்கத்தையும் மாற்றி மாற்றி பார்த்த ஈஷ்வரபாண்டியனுக்கு ஏதோ தவறாக தோன்றவே... " வருண் நீ ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்கன்னு நல்லா தெரியுது ... இந்த மரகதலிங்கம் நம்ம சிவன் கோவில்ல இருக்க வேண்டிய லிங்கம். கோவில்ல கண்டெடுத்த ஓலைச்சுவடில கூட இந்த விஷயம் இருக்கு...இப்ப நீ பண்ணிட்டு இருக்குறது எல்லாம் வேண்டாத வேலைடா... உங்க அப்பாவோட நண்பனா சொல்றேன் ....உடனே இங்க இருந்து கிளம்பிடலாம் ..... இந்த இடத்தைப் பத்தி போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடலாம் அவங்க வந்து இந்த லிங்கத்தை கொண்டு போய்டுவாங்க ... "
" இல்ல இல்ல அங்கிள் வே வேண்டாம் போலீஸ்க்கு எல்லாம் போகாதீங்க .... ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க இந்த மாதிரி சிலைங்களுக்கு எல்லாம் இப்ப ரொம்ப மவுசு அதிகம்.... அதுவும் இதெல்லாம் ரேர் பீஸ் ... இந்த ஒரு சிலை போதும் லைஃப் லாங் கோடீஷ்வர வாழ்க்கை வாழலாம் … கையளவு உள்ள மரகலிங்க சிலைங்களுக்கே இன்னைய தேதில மார்க்கெட்ல 500 கோடிக்கு வொர்த் இருக்கு… இதுவோ பெரிய லிங்கம் இதோட மதிப்பு நம்ம கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு பெருசா இருக்கும்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க அங்கிள் ... கிடைக்கிற லாபத்துல ஆளுக்கு 50 -50 எடுத்துக்கலாம்.... "
" போலீஸுக்கு போனா சல்லிப்பைசாவுக்கு கூட நமக்கு லாபம்னு வராது ... ஆனா நான் சொன்ன மாதிரி கேட்டா தலைமுறை தலைமுறையா நாம உட்கார்ந்து சாப்பிடலாம் ... அவ்வளவு லாபம் வரும் ... இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க அங்கிள் ... உங்க பையனுக்கு இந்த ஊர்லயே நீங்க பெரிய ஹாஸ்பிட்டல் கூட கட்டித்தரலாம்... " என்று ஆசை வார்த்தைக் கூறி மூளைச்சலவை செய்துகொண்டிருந்தான் வருண்.
அவன் கூறுவதைக்கேட்ட ஈஷ்வரபாண்டியன் இரு புருவங்களும் சிந்தனை முடிச்சிட ஆழ்ந்து சிந்திக்கலானார்.அவ்வளவு பெரிய தொகை என்றவுடன் என்னதான் செல்வந்தராக இருந்தாலுமே பேராசை என்ற கொடியபேய் அவரின் மனதுக்குள் சென்று சம்மணமிட்டபடி அமர்ந்து கொண்டது.
அவரை எப்பாடுபட்டாவது சம்மதிக்கவைத்து போலிஸிற்கு விஷயம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் முழுக் கருத்தாக இருந்தான் வருண் . " இல்ல வருண் . என்ன இருந்தாலும் இது சட்டப்படி தப்பு இல்லையா? அதுவும் நம்ம சிவன் கோவில் சொத்து… இதைப்பத்தி யாருக்காவது தெரிஞ்சா என் மானம் இல்ல போய்டும் ...?" அவனிடம் ஓரளவிற்கு சமாதானமாக பேசினார் ஈஷ்வரபாண்டியன்.
" உங்களையும் என்னையும் தவிர வேற யாருக்கும் இந்த இடத்தைப் பத்தி தெரியாது அங்கிள்...அதனால நீங்க வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல ... சோ பீ கூல் அங்கிள் " என்று எப்படியோ நைச்சியமாகப் பேசி சம்மதிக்கவைத்து விட்டான். யானைக்கும் அடிச் சறுக்கும் என்பது போல் அப்பெரியவரும் அவனுடைய நைச்சியமான பேச்சிற்கு இசைந்து அவனுடைய திட்டத்தில் தானும் ஒரு அங்கமானார் .
வருணுடன் சேர்ந்து அந்த லிங்கத்தை இடம்பெயர்த்த பொழுதுதான் அவருக்கும் தெரியாமல் அவருடைய மோதிரம் அவ்விடத்தில் தவறி விழுந்தது . அவரும் பாதி குழப்பமான மனநிலையிலும் பதட்டமான சூழலிலும் இருந்ததால் அதனை கவனியாமல் விட்டுவிட்டார் .
லிங்கத்தை இடம்மாற்றி தற்போதுள்ள இடத்தில் வைத்தபிறகு ஈஷ்வரபாண்டியன் வருணிடம் " வருண்.... எனக்கு ரொம்ப நேரமா ஒரு சந்தேகம். இந்த ஊர்லயே பிறந்ததில இருந்து இருக்கிற எனக்கு கூட இப்படி இந்த குன்றுகிட்ட இப்படி ஒரு இடம் இருக்கு அதுல இந்த லிங்கம் இருக்குங்குற சின்ன ஹிண்ட் கூட கிடைக்கலையே!!! உனக்கு எப்படி தெரியும்
" அ... அது வந்து ... அது கொஞ்சம் சிக்கலான கதை ... அதை அப்புறம் உங்களுக்கு சொல்றேன்... இப்ப இங்க இருந்து கிளம்புவோம் ... விடியிற நேரம் ஆகப்போகுது... யாராவது பார்த்துட போறாங்க ..." என்றவாறு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் வருண்.பிறகு வருணும் ஈஷ்வரபாண்டியனும் அங்கிருந்து கிளம்பினர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro